நெல்லை: ஓய்வூதியம், விதவை உதவித்தொகை கேட்டு 3 ஆண்டுகளாக போராடும் பெண்கள்!
முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 3 ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருநெல்வேலி: முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 3 ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாளையங்கோட்டை ஒன்றியம், ராமையன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் கே.ஏ. மஸ்தான் தலைமையில் திரண்டு முற்றுகையிட்டனர்.
இக்கிராமத்தில் வசிக்கும் 60 வயது கடந்த முதியோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைப் பெண்கள் உள்பட 54 பேர் தங்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2013 இல் இருந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
இது குறித்து முதியவர் ஒருவர் கூறியது: தொடர்ந்து 3 ஆண்டுகளாக உதவித் தொகை கேட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்து வருகிறோம். திங்கள்கிழமை 5 முறையாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எங்கள் கிராமத்தில் வசதி படைத்த பலர் உதவித் தொகை பெற்று வருகின்றனர்.
வாழ்வாதாரமின்றி வறுமையில் வாடும் எங்கள் கிராமத்தை சேர்ந்த 54 பேருக்கு மாவட்ட நிர்வாகம் மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும் என்றார் அவர்.
பின்னர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகள் பட்டியலுடன் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.