பொறியாளரிடம் ரூ. 30 லட்சம் மோசடி: சிபிசிஐடி விசாரணை
புதுவையை சேர்ந்த பொறியாளரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்தது குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி : புதுவையை சேர்ந்த பொறியாளரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்தது குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி தில்லைமேஸ்திரி வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் சிங் (48). பொறியாளரான இவருக்கு பழக்கமானவர்கள் லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜன்பாபு மற்றும் அவரது மனைவி அமுதா ராணி. ராஜன்பாபு மற்றும் அமுதா ராணிக்கு பழக்கமான முத்துராமலிங்கம் என்பவர் காரைக்குடியில் பங்குச் சந்தையில் ஈடுபடும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
முத்துராமலிங்கத்திடம் பங்குகள் வாங்கித் தருவதாக சிவக்குமார் சி்ங்கிடம் ராஜன்பாபுவும், அமுதா ராணியும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2012-ஆம் ஆண்டு ராஜன்பாபு, அமுதாராணி மூலம் ரூ. 36 லட்சத்துக்கு முத்துராமிலிங்கத்திடம் பங்குகள் வாங்கினார்.
ஆனால் பங்குகள் வாங்கிய சில நாள்களில் நிறுவனத்தை முத்துராமலிங்கம் மூடிவிட்டார். இது குறித்து அறிந்த சிவக்குமார், 3 பேரையும் அணுகி கேட்டுள்ளார். அப்போது ரூ. 6 லட்சம் மட்டும் முதலில் கொடுத்துள்ளனர். மீதிப் பணத்தை வெகு நாள்களாகியும் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவக்குமார் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.