தற்போதைய செய்திகள்

பயங்கரவாதப் பிரச்னை பரந்துபட்ட வகையில் அணுகப்பட வேண்டும்: ஹமீது அன்சாரி

DIN

பமாகோ, 

எல்லை தாண்டிய பயங்கரவாதம், சர்வதேச பயங்கரவாதம் ஆகியவை பரந்துபட்ட வகையில் அணுகப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கூறினார்.

அரசு முறைப் பயணமாக, நைஜீரியா, மாலி ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ள அவர், தனது பயணத்தின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை, மாலி தலைநகர் பமாகோவில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

உலக நாடுகள் தற்போது ஒன்றுக்கொன்று தொடர்பில் இருப்பதால், வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடும் வகையிலான பிரச்னைகளும் எழுகின்றன. அந்தப் பிரச்னைகளை அதிகாரமிக்க சில நாடுகளால் மட்டுமே தீர்த்துவிட முடியாது அல்லது பிராந்திய நாடுகளின் முயற்சியால் மட்டுமே தீர்க்க முடியாது.

பருவநிலை மாற்றம், சர்வதேச பொது சுகாதார சவால்கள், போதை மருந்து கடத்தல், ஆள் கடத்தல், ஆயுதப் பரவல், சர்வதேச பயங்கரவாதம் போன்ற பிரச்னைகள் நம் முன் உள்ளன. அவற்றில், இணையவழிப் பாதுகாப்பு, விண்வெளிப் பாதுகாப்பு ஆகியவையும் புதிதாக இணைந்துள்ளன.

பயங்கரவாதச் செயல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா தற்போது எதிர்கொண்டுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம், சர்வதேச பயங்கரவாதம் ஆகியவற்றை பரந்துபட்ட வகையில் அணுக வேண்டியது அவசியமாகும். அதற்காக, சர்வதேச அளவில் ஓர் ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மாலி அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நம்முடைய மக்களுக்கும், சமூகத்துக்கும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிட நாம் தனித்தும், இணைந்தும் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஒப்பந்தத்தில் மாலி அரசு கையெழுத்திட்டிருப்பதை இந்தியா வரவேற்கிறது. மாலியின் வளர்ச்சிப் பணிகளுக்கு இந்திய அரசு முழு ஆதரவு அளிக்கும்.

மாலியின் வளர்ச்சி மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கு இந்திய அரசு 35.3 கோடி (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,352 கோடி) கடனுதவி அளித்துள்ளது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக, முதலீடு தொடர்புகள் மேலும் அதிகரிக்க வேண்டும்.

திம்புக்டு நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, கலாசார மதிப்பீடுகள் நிறைந்த பாரம்பரிய சின்னங்களை சிலர் அழிக்க முயன்றதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. அந்தச் சின்னங்களை புதுப்பிப்பதற்கான பணிகளில் மாலி அரசுக்கு உதவுவதற்கு இந்திய அரசு தயாராக உள்ளது என்றார் ஹமீது அன்சாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT