21 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை: முதல்வர் நாராயணசாமி தகவல்
புதுவையில் 21 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: புதுவையில் 21 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சமூக நலத்துறை சார்பில் ஊனத்தை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நெல்லித்தோப்பு கீர்த்தி மகாலில் நடைபெற்றது.
ஊனத்தை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தடுப்பது பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரை மேம்படுத்துவது தொடர்பாக தேசிய நிறுவனத்தில் இருந்து நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனைகள், அறிவுரைகளை வழங்கினர்.
முதல்வர் நாராயணசாமி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: மே மாதம் 1 ம் தேதி முதல் ஹெல்மட் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது அதனை கடைபிடிப்பது மாநில அரசின் கடமை. அதனால் மே 1 முதல் ஹெல்மட் கட்டாயமாக்கப்படும் .
புதுச்சேரியின் மக்கள் தொகையான 12 லட்சம் பேரில் 30 ஆயிரம் பேர் மாற்று திறனாளிகளாக உள்ளனர். அவர்களில் 21 ஆயிரம் பேருக்கு மாநில அரசு உதவித்தொகை வழங்குகிறது. எங்கள் அரசு மகளிர் நலனுக்கு முக்கியத்துவதும் அளித்து வருகிறது.
விபத்துகளால் அதிகளவில் உடல் ஊனமுற்றோர் பெருகி வருகின்ற்னர். மே 1 ம் தேதி முதல் ஹெல்மட் கட்டாயம் அணிவதை அரசு உறுதி செய்யும் என்றார் நாராயணசாமி.
நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி வாழ்த்திப் பேசினார். அரசு செயலாளர் மிஹிர் வரதன், இயக்குநர் ஆர்.மீனாகுமாரி, துணை இயக்குநர் வி.சரோஜினி, உதவி இயக்குநர் ஆர்.ரத்னா, குழந்தைகள் நலத்தி்ட்ட அதிகாரி விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அங்கன்வாடி ஊழியர்கள், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் வளர் இளம்பெண்கள் 150-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.