துணைநிலை ஆளுநரால் ஆட்சி நிர்வாகம் சீர்குலைவு: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
புதுச்சேரி துணைநிலை ஆளுநரால் மாநில ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநரால் மாநில ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழுகூட்டம் வியாழனன்று அஜிஸ்நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்றபின் குணசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி சட்டப்பேரவைச் தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை தந்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்த காங்கிரஸ் அரசு , அத்தகைய வாக்குறுதிகளில் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை.
விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்களுக்கான வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்ற முன் வரவில்லை. புதுச்சேரி பாரதி, ஏஎப்டி, சுதேசி பஞ்சாலைகளை இயக்குவதற்கு ஆக்கபூர்வமான நடிவடிக்கை எடுக்க வில்லை.
கிராமப்புற மக்களின் வளர்ச்சி பின்னோக்கியுள்ளது. 100 நாள்வேலை திட்டத் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய கூலியை கூட சரியாக வழங்கப்படவில்லை. இந்ததிட்டத்தில் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்தி வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு செயலற்ற அரசாக உள்ளது.
ஆளுநரின் நடவடிக்கை
புதுச்சேரியை ஆட்சி செய்வது துணைநிலை ஆளுநர் கிரண்பேடியா, அல்லது மக்களால் தேர்வு செய்த காங்கிரஸ் அரசா என்பது சந்தேகம் உள்ளது. பலதிட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மத்திய அரசை நிர்பந்தம் செய்து மாநில வளர்ச்சிக்கான நிதி ஆதாரத்தை பெற வேண்டிய துணைநிலை ஆளுநர் சுயவிளம்பரத்திற்காக செயல்பட்டுவருகிறார். இதனால் மாநிலத்தின் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது என்றார்.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு விவகாரத்தால் புதுச்சேரியில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாநில வளர்சிக்கான திட்டங்களை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கட்சி மக்களை திரட்டி போராடும் என்றார்.
மாநில வளர்ச்சி குறித்து கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட மலரை குணசேகரன் வெளியிட, எழுத்தாளர் தமிழ் மல்லையா பெற்றுகொண்டார்.
தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சுமதி ஆகியோர் உடனிருந்தனர்.