தற்போதைய செய்திகள்

சசிகலாவிடம் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதி

DIN

சென்னை: அந்நியச் செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை சசிகலாவிடம் விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்துவதற்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்து நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ஜெ.ஜெ. டி.வி.க்கு அப்லிங்க் கருவிகளை வாடகைக்கு வாங்கியதில் அந்நியச் செலாவணி சட்ட விதிகளை மீறியதாக வி.கே.சசிகலா, அவரின் அக்காள் மகன் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை கடந்த 1996-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை, எழும்பூர் முதலாவது பொருளாதாரக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணைக்கு பாஸ்கரன் ஆஜராக வேண்டும் என கடந்த 20-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணைக்கு நீதிமன்றத்தில் பாஸ்கரன் நேரில் ஆஜரானார். அப்போது நீதித்துறை நடுவர் ஏ.ஜாகீர்உசேன், அந்த வழக்கின் குற்றச்சாட்டுகளை பாஸ்கரனிடம் வாசித்துக் காட்டிப் பதிவு செய்தார். இக்குற்றச்சாட்டுகளை ஏற்கிறீர்களா, மறுக்கிறீர்களா என கேட்டதற்கு மறுப்பதாக பாஸ்கரன் தெரிவித்தார்.

இதையடுத்து நீதித்துறை நடுவர் ஜாகீர்உசேன், அரசுத் தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்துகிறீர்களா என கேட்டார். அதற்கு பாஸ்கரன், குறுக்கு விசாரணை செய்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து அரசுத் தரப்பு சாட்சிகளிடம்  வரும் 10-ஆம் தேதி குறுக்கு விசாரணை செய்ய அனுமதி அளித்து அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

விடியோ கான்பரன்சிங்குக்கு அனுமதி: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா சார்பில் அவரது வழக்குரைஞர்கள் ஆஜராகி, சசிகலா மீது தொடரப்பட்டுள்ள 4 அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் விசாரணையை விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்புத் தெரிவித்து, சசிகலா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்திருந்தது.

இம்மனு மீதான விசாரணையும் வியாழக்கிழமை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் நீதித்துறை நடுவர் ஜாகீர்உசேன், சசிகலாவிடம் விடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை செய்வதற்கு அனுமதி அளித்தார். அதற்கு சசிகலா தரப்பினர் நீதிமன்றத்தில் இரு வாரங்களுக்கு பிரமாணப் பத்திரம் அளிக்க வேண்டும், சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பரப்பண அக்ரஹார சிறையில் விடியோ கான்பரன்சிங் நடத்த சான்று அளிக்க வேண்டும், நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரம் கர்நாடக அரசின் உள்துறை, சிறைத்துறைக்கு அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

விடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை செய்ததால், பின்னாளில்
சசிகலா, விசாரணையில் திருப்தி இல்லை, நியாயம் கிடைக்கவில்லை என கூறக் கூடாது.  விசாரணையின்போது, எந்த மொழியில் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதை சசிகலா  தெரிவிக்க வேண்டும். இரு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்றால் சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்படும் எனவும் நீதித்துறை நடுவர் ஜாகீர் உசேன் உத்தரவிட்டார். இந்த வழக்கின் சசிகலா தொடர்பான விசாரணையை, இம்மாதம் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதித்துறை நடுவர் ஜாகீர் உசேன் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT