நீர்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை: சேர்வலாறு, கடனாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. சேர்வலாறு, கடனாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த 2 தினங்களாக மழை நீடித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை}95, பாபநாசம் கீழ் அணை-76, சேர்வலாறு அணை-56, மணிமுத்தாறு அணை (அதிகபட்சம்) 100, கடனாநதி அணை-20, ராமநதி அணை-26, கருப்பாநதி அணை-38, குண்டாறு அணை-31, அடவிநயினார் அணை-15, நம்பியாறு அணை-13, கொடுமுடியாறு அணை-25, கன்னடியன் அணைக்கட்டு-78.
பிற பகுதியில்...திருநெல்வேலி-1, பாளையங்கோட்டை-2, நான்குனேரி-6, ராதாபுரம்-57, சேரன்மகாதேவி-64, அம்பாசமுத்திரம்-56.4, தென்காசி-14.6, செங்கோட்டை-39, ஆய்க்குடி-16,
சிவகிரி-6.
நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 1800 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 477 கனஅடி, கடனாநதி அணைக்கு 349 கனஅடி, ராமநதி அணைக்கு 58.30 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 11 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 67 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 30 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம்}98.00 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 98.75 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம்-82.50 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் மேலும் 2.70 அடி உயர்ந்து 77.70 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம்-63.50 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம்-64.96 அடி,
குண்டாறு அணையின் நீர்மட்டம்-35.88 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம்
91.00 அடி, வடக்குப்பச்சையாறு அணை நீர்மட்டம் 25.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம்-21.65 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம்-42.00 அடியாகவும் உள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்கு: நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் பாபநாசம் கீழ் அணைப் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் அணைகளில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், செவ்வாய்க்கிழமை காலை தாமிரவருணி ஆற்றில் கல்லிடைக்குறிச்சியில் ஆயிரம்கல் மண்டபத்தை ஒட்டி தண்ணீர் சென்றது. திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அவசரமாக வெளியேறினர். ஆற்றில் சுமார் 2,500 கனஅடி தண்ணீர் சென்றதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன. பிற்பகலில் நீர்வரத்து குறைந்தது.
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 700 கனஅடி, கடனாநதி அணையில் இருந்து 70 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 35 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 25 கனஅடி, அடவிநயினார் அணையில் இருந்து 50 கனஅடி, நம்பியாறு அணையில் இருந்து 30 கனஅடி, கொடுமுடியாறு அணையில் இருந்து 60 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் அதிகரிப்பு: மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்திருந்தது. நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் மணிமுத்தாறு அருவியில் தடுப்பு கம்பிகள், சுவர் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை தொடர்ந்து நீடிப்பதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.