முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கான சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியாகி 6 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டதால் உடனடியாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினர் பதவி காலியாகும் போது, அந்த தொகுதிக்கு 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்துக்கு, 6 மாத காலத்துக்குள் தேர்தலை நடத்த தைரியம் இல்லாமல் போய் விட்டது.

கடந்த 2009 இல் திருமங்கலம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் தாராளமாக வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர்களைக் கவர திருமங்கலம் யுக்தி என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் 3,742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே பணப்பட்டுவாடா புகாரின் காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் மட்டும் கடந்த 2016 இல் தேர்தல் ரத்து செய்யப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது.எனவே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சியினர் மற்றும் அதைப் பெற்றுக்கொள்ளும் வாக்காளர்களுக்கு 5 ஆண்டுகள் முதல 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பட்டுவாடா புகாரில் சிக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.