தற்போதைய செய்திகள்

"காலம் கடந்த நீதி; மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்': தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

DIN

காலம் கடந்த நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதால்,  நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவுறுத்தினார்.

திருச்சி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட நூலகத் திறப்பு விழா,  50 ஆண்டுகளுக்கு மேல் வழக்குரைஞர் தொழிலில் பணியாற்றிய மூத்த வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்கள் சங்க முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விழா,  திருச்சி நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியது:

நீதிமன்ற பணியில் இணைந்து 120 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் பாரம்பரியமிக்க திருச்சி வழக்குரைஞர்கள் சங்கத்தின் விழாவில் பங்கேற்று, மூத்த வழக்குரைஞர்களை கௌரவிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமைக்குரியது. எனது மூத்த வழக்குரைஞர்களும் 50 ஆண்டுகாலம் பணி முடித்து பொன்விழா கண்டுள்ளனர். அவர்களது அறிவுரையை கேட்டதாலே நான் தலைமை நீதிபதி அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளேன். எனவே, மூத்த வழக்குரைஞர்களை இளம் வழக்குரைஞர்கள் தங்களது முன்உதாரணமாக கொள்ள வேண்டும். மேலும், இளம் வழக்குரைஞர்களுக்கு மூத்த வழக்குரைஞர்கள் வழிகாட்டியாக இருந்து பயிற்றுவிக்க வேண்டும்.

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் திறக்கப்படாமல் உள்ள கழிப்பறைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குரைஞர்கள் சங்க வளாகத்திலேயோ, நீதிமன்ற வளாகத்திலேயே இடம் இருந்தால் பெண் ஊழியர்கள், வழக்குரைஞர்களுக்கான பிரத்யேக இடம் ஒதுக்க பரிசீலனை செய்யப்படும். நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் வழக்குத் தாக்கல் செய்யும் மனுதாரர்களை சார்ந்தே இயங்க வேண்டியுள்ளது. 

எனவே, மனுதாரர்களுக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். காலம் கடந்த நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது. வழக்குகளை விரைந்து முடித்தால் மட்டுமே மனுதாரர்களின் நம்பிக்கையை பெற முடியும். 

சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நீதிமன்றங்களும் வழக்கை விரைந்து முடிப்பதோடு மல்லாமல், வழங்கப்படும் தீர்ப்புகள் சரியானதாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நீதிபதிகள் போற்றப்படவெண்டுமெனில் அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் பேசப்பட வேண்டும். வழக்கின் முடிவுக்கு எடுத்துக் கொண்டவற்றை தெளிவாக தீர்ப்பில் விளக்க வேண்டும். மனுதாரருக்கு மட்டுமல்லாது, மேல்முறையீடு செல்லும் நீதிமன்றங்களும் நீதிபதியின் முடிவை அறிந்து கொள்ளும் வகையில் தீர்ப்புகள் அமைய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT