உ.பி. சிறையில் பயங்கரம்: மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங் சுட்டுக்கொலை
உத்தரபிரதேச மாநிலத்தில் மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி, சிறைச்சாலை வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி, சிறைச்சாலை வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு விசாரணைக்காக இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி கைது செய்யப்பட்டு ஜான்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏ கிருஷ்ணன் ராய் கொலை வழக்கு விசாரணைக்காக இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
இந்நிலையில், மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு முன்னா பஜ்ரங்கியை இன்று காலை பக்பத் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஜான்சி சிறைச்சாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பாக்பத் மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார்.
Advertisement
அங்கிருந்து இன்று காலை நீதிமன்றத்திற்கு செல்வதற்காக வெளியே அழைத்து வந்தனர். அவரை ஏற்றி செல்வதற்காக சிறை வளாகத்தில் போலீஸ் வேன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, சுமார் 6.30 மணியளவில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மற்றொரு ரவுடியான சுனில் ரதி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் முன்னாவை நோக்கி சுட்டுள்ளார். இதில் முன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையாளி கைது செய்யப்பட்டான்.
சிறை வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் திடீர் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பலத்த பாதுகாப்பையும் மீறி சிறைச்சாலைக்குள் உள்ள கைதிக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? என்பது குறித்து பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறைச்சாலை வளாகத்தில் கொலையாளி மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணை நடத்தவும், ஜெயிலரை பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்வத்திற்கு பொறுப்பானவர்களை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 29 ஆம் தேதி பாஜகவுக்கு எதிரான கட்சிகளையும் அதன் தலைவர்களையும் முன்னா தனது கணவர் பஜ்ரங்க் ஆதரித்ததால், அவரை போலி என்கவுண்டர் ஒன்றில் கொலை செய்வதற்கு சதித்திட்டம் திட்டப்பட்டுள்ளதாக அவரது மனைவி குற்றம்சாட்டியிருந்ததால், தற்போது இந்த கொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.