மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய எண்ணிய மகளை இழந்து விட்டோம்: பெரியப்பா கண்ணீர் பேட்டி
மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய பிரதீபாவை இழந்து விட்டோம் என்று அவருடைய பெரியப்பா
விழுப்புரம்: மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய பிரதீபாவை இழந்து விட்டோம் என்று அவருடைய பெரியப்பா முருகன் கண்ணீருடன் தெரிவித்தார்.
செஞ்சி அருகே வளத்தியை அடுத்த பெருவளூர் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரதீபா (18). கடந்த 2016-2017 ஆம் கல்வியாண்டில், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயின்று, பொதுத் தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேரஆர்வமாக இருந்த அவர், முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எழுதினார்.
அதில், 159 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தும், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. எனினும், அவர், மீண்டும் நீட் தேர்வெழுத ஓராண்டாக தீவிர முயற்சி எடுத்துப் படித்து வந்தார்.
அதன்படி, நிகழாண்டும் நீட் தேர்வு எழுதினார். அதன் முடிவுகள் இன்று செவ்வாய்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று திங்கள்கிழமை பிற்பகலிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், கடந்த ஆண்டைவிட மிகக் குறைவாக மதிப்பெண் கிடைத்ததாம். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பிரதீபா நிகழ் ஆண்டும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காது எனக் கருதி மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்த பிரதீபா விஷம் குடித்து மயங்கினார். உடனடியாக, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சண்முகத்துக்கு 3 பிள்ளைகள். இவர்களில் மூத்த மகள் எம்.எஸ்சியும், மகன் பொறியியலும் படித்து வருகின்றனர்.
பிரதீபாவின் பெரியப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், நீட் தேர்வு எழுதி எப்படியாவது அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து மருத்துவராகி மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பது பிரதீபாவின் கனவாக இருந்தது.
தேர்வு முடிவு நேற்று திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் பிரதீபா குறைந்த மதிப்பெண் பெற்றிருந்ததால், மனதளவில் பாதிப்படைந்து சோகமாக காணப்பட்டார். அவளுக்கு நாங்கள் ஆறுதல் கூறினோம். எங்களின் ஆறுதல் அவளது மனம் அதனை சகித்து கொள்ள முடியவில்லை.
தான் கண்ட மருத்துவ கனவு நிறைவேறாமல் போய் விட்டதே என்று எண்ணிய பிரதீபா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய பிரதீபாவை இழந்து தவித்து வருகிறோம் என்று அவரது பெரியப்பா மருகன் கண்ணீருடன் கூறினார்.