தற்போதைய செய்திகள்

மாநிலங்களவைக்கு வைகோ தகுதியானவரா? சுப்பிரமணியன் சுவாமி சொல்லும் விளக்கம்

DIN

மாநிலங்களவை பதவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தகுதியானவரா என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும், ஏன் அவரை மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்பதற்கான வைகோவின் ஆட்சேபகரமான சில உரைகளை மேற்கோடிட்டு  குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடுவுக்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அருகே உள்ள ராணி சீதை மன்றத்தில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும் பேசியதாக கூறி திமுக ஆட்சிக் காலத்தில் வைகோ மீது இந்திய தண்டனை சட்டத்தில் தேசதுரோக குற்றம் (124 ஏ) மற்றும் இரு பிரிவினரிடையே விரோதத்தைத் தூண்டும் செயல்பாடு (153ஏ) ஆகிய பிரிவுகளில் வைகோ மீது ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ புத்தக வெளியீட்டு விழாவில் தொடர்பாக எழும்பூர் நீதிமன்ற வழக்கில் 8 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் தானே சரணடைவதாக கூறி, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி புழல் சிறைக்கு சென்ற வைகோ. பிறகு 52 நாட்கள் கழித்து மே 25 ஆம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார்.

பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ- கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றபட்டது.

பின்னர், அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக ஜூன் 19 ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார்.

அந்த வழக்கில் ஜூலை 5 காலை தீர்ப்பளித்த நீதிபதி, வைகோவுக்கு எதிரான குற்றசாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளி என அறிவிப்பதாக தீர்ப்பளித்தார். மேலும் இந்த குற்றத்திற்காக 1 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை ஒரு மாதம் நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் காரணமாக திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார். இதன் மூலம் 23 ஆண்டுகளுக்கு பிறகு  மாநிலங்களவை உறுப்பினராகி உள்ள வைகோ நாடாளுமன்றத்திற்கு செல்கிறார்.  

இதனிடையே தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிரித்து வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வைகோவின் இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது என தெரியவந்துள்ளது.

விரைவில் வைகோ நாடாளுமன்றத்தில் பதவியேற்க உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான  சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடுவுக்கு  சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புக்கு வைகோ தகுதியானவர்தானா என்பதை ஆய்வு செய்ய மாநிலங்களவை ஒழுங்குக் குழுவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அந்த கடிதத்தில் ஹிந்தி ஒரு வளர்ச்சி அடையாத மொழி. ரயில்வே அட்டவணையில் மட்டுமே அது அச்சிடப்பட்டுள்ளது என வைகோ முன்னர் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சு அனைத்து இந்தியர்களுக்கும் அவமானம் ஆகும்.  அதேபோல், நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள  அவர் சத்தியப்பிரமாணத்தை மீறியதாகவும், இந்திய அரசியலமைப்பை மீறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், சமஸ்கிருதம் ஒரு வழக்கொழிந்த மொழி எனவும் அதனை கற்பதில் எவ்வித பயனும் இல்லை எனவும் கூறியுள்ளார். இதுவும் நாட்டிற்கான அவமானம் என்று வைகோவின் ஆத்திரமூட்டும் கருத்துக்களை மேற்கொள் காட்டியுள்ளார் சுவாமி. 

அதனால், வைகோவை நீக்கம் செய்வது குறித்து தீர்மானம் கொண்டு வருவது குறித்து மாநிலங்களவை ஒழுங்கு குழு ஆராய வேண்டும் என்றும், அவரை "பதவி நீக்கம்" செய்வதற்கான தீர்மானத்தை மாநிலங்களவையில் நிறைவேற்று பொருத்தமானது என்று நான் கருதுகிறேன் என்றும் சுவாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, வைகோ குறித்து சுப்பிரமணியன் சுவாமி நேற்று தன்னுடைய டுவிட்டரில் விமர்சித்து இருந்தார். அதில், வி.கோபால் சாமி என்ற வைகோ ஒரு கிறிஸ்துவர். கொல்லப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவரின் குழப்பமான கருத்தியல் மீது உடன்பாடு கொண்டவர். மிஷனரி கொள்கை உடைய இவர் மாநிலங்களவைக்குள் நுழைந்தால் அது இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சீர்குலைக்கும் என்று அவர் கூறியிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT