தற்போதைய செய்திகள்

தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

DIN


புது தில்லி: தனியார் மருத்துவக் கல்லூரியின் 108 மாணவர்களை 6 மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், அந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இக்கல்லூரியில் 2016-17ஆம் ஆண்டில் சேர்ந்த 108 மாணவர்கள், தங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

அதை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த 108 மாணவர்களைச் சேர்க்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 108  மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது தொடர்பாக தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கருத்துருவை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 108 மாணவர்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க இயலாது என்று கூறிய தமிழக அரசு, இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி புதிய மனுவை தாக்கல் செய்தது. 

அரசுத் தரப்பில் தாக்கல் செய்த அந்த மனுவில், "108 மாணவர்களையும் தமிழகத்தில் உள்ள 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. அந்த அனுமதியின்படி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களையும், காஞ்சிபுரம் கற்பக விநாயகா, கோவை கற்பகம், சென்னை தாகூர், மதுரை வேலம்மாள் ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளில் தலா 12 மாணவர்களையும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் 10 மாணவர்களையும் சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மறு ஆய்வு மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட  மாணவி சு.அர்ச்சனா உள்ளிட்ட 103 பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஏப்ரல் 26-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில்,  "இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பப்பட்ட கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதியிட்ட முன்மொழிவுகளை இந்த மனு தொடர்பான விசாரணை முடியும் வரை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயின்றால் மருத்துவம் தொடர்பான போதுமான அறிவு கிடைக்காது என்பதால், மனுதாரர்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்ப தமிழக அரசுக்கு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது. 

இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறைக் கால அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சு. அர்ச்சனா உள்ளிட்டோர் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஏ. சிராஜுதின், வழக்குரைஞர் சி.ஆர். ஜெய சுகின் ஆஜராகி மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டவை குறித்து விளக்க முற்பட்டனர். 

அப்போது நீதிபதிகள், மனுவில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் தவறான அனுமானத்தைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தனர். மேலும், மனுவில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துடன்,  மாணவர்களின் மருத்துவக் கல்விக் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் பார்த்துக் கொள்ளும் எனத் தெரிவித்து மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT