நீட்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மேலும் 2 பேர் கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவரும், ஒரு மாணவியும் சேர்ந்து படித்து வருவதாக புகார் வெளியாகி உள்ளது.
இதையடுத்து தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மாணவ, மாணவரின் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்களது நீட் நுழைவுச்சீட்டு புகைப்படமும், அனுமதி கடித புகைப்படமும் வேறு வேறாக இருப்பதாகப் புகார் தெரிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், அவர்களின் புகைப்பட வித்தியாசம் பற்றி விசாரணை நடத்த சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அந்த கல்லூரி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டின் 150 மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் போது ஒரு மாணவன், ஒரு மாணவி மீது சந்தேகம் எழுந்தது. 2 மாணவர்களின் புகைப்படங்கள் வேறு மாதிரி தெரிந்ததால் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதில் இருப்பது மாணவர்களின் புகைப்படம்தான் என 2 மாணவர்களின் பெற்றோரும் உறுதியளித்துள்ளனர்
இந்த நிலையில் சம்பந்தபட்ட மாணவர்கள் 2 பேரும் தேர்வுக்குழு விசாரணைக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் ஆவணங்கள், கை ரேகை உள்ளிட்டவற்றை தேர்வு குழுவினர் சரிபார்ப்பார்கள். சந்தேகம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டியது தேர்வுக் குழுவின் வேலை. முறைகேடு நடைபெற்றதா என்பதை தேர்வு குழுதான் நிரூபிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 24 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுவிட்டன. அதில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளன. அதில் எந்த முறைகேடுகளும் இல்லை. தற்போது கோவை தனியார் மருத்துவ கல்லூரி குறித்து வெளியாகியுள்ள விவகாரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் கிடைத்தால்தான் மேலும் முறைகேடுகள் நடந்துள்ளதா என தெரியவரும் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.