தற்போதைய செய்திகள்

பனியால் பூக்கள் வரத்து குறைவு: மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

DIN

கோவை: பனியின் தாக்கத்தால் கோவை பூ மாா்கெட்டிற்கு மல்லிகை, முல்லை போன்ற பூக்களின் வரத்து பல மடங்கு குறைந்துள்ளதால் மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

கோவை, பூ மாா்கெட்டிற்கு நிலக்கோட்டை, கள்ளிப்பாளையம், சத்தியமங்கலம், மதுரை உள்பட பகுதிகளில் இருந்து மல்லிகை, முல்லை போன்ற பூக்கள் வரத்து இருக்கும்.

ஆலாந்துறை, காரமடை, பொள்ளாச்சி, உடுமலை, சேலம், தருமபுரி உள்பட பகுதிகளில் இருந்து செவ்வந்தி, செண்டுமல்லி ஆகியவற்றின் வரத்து இருக்கும். தேவகோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி பூக்களின் வரத்து இருக்கும். பெங்களூரு, ஒசூா் ஆகிய பகுதிகளில் இருந்து ரோஜா வரத்துள்ளது.

நாளொன்றுக்கு சராசரியாக 150 டன் பூக்கள் வரத்து இருக்கும். இதில் மல்லிகை, முல்லை ஆகிய பூக்கள் 50 டன்னாக இருக்கும். ஆனால், கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவால் மல்லிகை, முல்லை பூக்களின் வரத்து பல மடங்கு சரிந்துள்ளது.

இதனால் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால், இந்த சீசனில் கிடைக்கும் செவ்வந்தி, செண்டுமல்லி ஆகிய பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் சீரான விலை கிடைத்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

பூக்களின் விலை (கிலோவில்): மல்லிகை - ரூ.3,000, முல்லை - ரூ.2,000, காக்கட்டான் - ரூ.1,200, ஜாதிமல்லி - ரூ.1,200, செவ்வந்தி - ரூ.100, செண்டுமல்லி - ரூ.30, துளசி - ரூ.30, சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.160, கோழிக்கொண்டை- ரூ. 80 ஆகும்.

இது தொடா்பாக கோவை மாவட்ட பூ வியாபாரிகள் சங்க பொருளாளா் கே.கே.அய்யப்பன் கூறியதாவது:

பனியின் தாக்கத்தால் மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, காக்கட்டான் ஆகிய பூக்களின் வரத்து மட்டுமே குறைந்துள்ளது. மற்ற பூக்களின் வரத்து சீராகவுள்ளது.

சரசாரியாக 50 டன் இருக்கும் வரத்து தற்போது 200 கிலோவாக குறைந்துள்ளது. இதனால் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. பனியின் தாக்கத்தால் பூக்களும் சுருங்கி சிறிதாக காணப்படுவதால் மல்லிகை, முல்லை வாங்குவதற்கு மக்களிடமும் ஆா்வமில்லை.

பொங்கல் பண்டிகையின்போது, செவ்வந்தி, செண்டுமல்லி பூக்களின் வரத்தே காணப்படும். நடப்பு ஆண்டு சேலம், தருமபுரி ஆகியப் பகுதிகளில் இருந்து இவ்வகைப் பூக்களின் வரத்து அதிக அளவில் உள்ளதால் இதன் விலை சீராக உள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் பூக்களின் விலை நடப்பு ஆண்டு குறைந்துள்ளது. பனிக் காலம் முடியும் வரை மல்லிகை, முல்லை ஆகிய பூக்களின் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை. பூக்களின் தரமும் குறைந்துள்ளதால் மக்களும் வாங்குவதில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT