கோப்புப்படங்கள் 
தற்போதைய செய்திகள்

தேவைதானா தேவைதானா பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்?

சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் அதிகாரிகளுடன் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் அந்த அமைப்பு தேவையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தி. இன்பராஜ்



சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் அதிகாரிகளுடன் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் அந்த அமைப்பு தேவையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

காவலர்களுக்கு பணியின்போது உதவி செய்யும் வகையில் நாட்டில் முதல் முறையாக 40 ஆண்டுகளுக்கு முன்பு சத்தீஸ்கர் காவல்துறையின் கீழ் உருவாக்கப்பட்டதுதான் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் (FOP) என்ற அமைப்பு. தமிழகத்தில் கடந்த 1966-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட  பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு, ஆரம்ப கட்டத்தில் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் மக்களுக்கு நல்வழிகாட்டுதல் போன்ற செயல்களை செய்து வந்தது.
இதன் தொடர்ச்சியாக பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பிரிவை சேர்ந்தவர்கள் தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கையாடல், அச்சுறுத்தி பணம் பெறுதல் போன்ற செயல்களை மேற்கொள்ளத் தொடங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, காவலர் உதவிப் பிரிவுகள் கலைக்கப்பட்டு அதன்பின் ஊர்க்காவல் படை எனும் பெயரில் காவல் பணி மேம்படுத்தப்பட்டு, அவர்களின் மூலமாக கூட்ட நெரிசல், கோயில் கண்காணிப்பு, சட்டம்-ஒழுங்கு பகுதிகளின் பாதுகாப்பு என செயல்படத் தொடங்கியது. நீண்ட காலமாக தமிழகத்தில் பெரிய அளவில் செயல்படாமல் இருந்த பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவலர் உதவிப் பிரிவானது, தமிழக காவல் துறையில் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக, கரோனா பரவல் தடுப்புக் கால பணிக்காக அதிகம் பேர் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

கோவையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நிர்வாகி ஒருவர் மீது பண மோசடி புகார் எழுந்தது. இதேபோல, மாநிலம் முழுவதும் பொதுமக்களை மிரட்டுதல், காவலர்களுக்கு உடந்தையாக செயல்படும் வகையில் அத்துமீறி செயல்படுதல் போன்ற புகார்களும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தன. 

குறிப்பாக வாகனச் சோதனையின்போது பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கையில் லத்தியை வைத்துக் கொண்டு விதிமுறையை மீறி செயல்படுவதாகவும், வாகன ஓட்டிகளிடம் அவர்கள் அதிகாரப் போக்குடன் தகாத வார்த்தைகளில் பேசுவது தொடர்ந்து நடைபெறுவதாகவும்   மாநிலம் முழுவதும் புகார் உள்ளது.

இந்நிலையில், தற்போது, நாட்டையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் தந்தை}மகன் மரணச் சம்பவத்தில் காவல்துறையின் கூலிப்படையாக பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டதாகவும், அவர்களை சிபிசிஐடி பிரிவு போலீஸôர் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்தப் பிரச்னை குறித்து சமூக செயற்பாட்டாளர் அக்ரி பரமசிவன் கூறியது:
 காவல்துறையின் கீழ் இயங்கும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்கிற பிரிவினை தொடங்குவதற்கான சட்ட நெறிமுறைகள் என்ன? அவர்களுக்கான தேர்வுமுறைகள் என்ன? கல்வித் தகுதிகள் என்ன? அவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையின் பிரதிநிதித்துவம் என்ன? அவர்களுக்கான சலுகைகள் என்ன? அவர்களுக்கான பணிகள் என்ன? அவர்களுக்கான  ஊதியம் என்ன?  இதுபோன்று பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தொடர்பாக எந்த நெறிமுறைகளும் வழிமுறைகளும் வழிகாட்டுதல்களும் தமிழக அரசிடம் இல்லை.

அரசியல் பின்னணி கொண்ட பலர் இடம்பெற்றுள்ள பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு மீது தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருவதால், அந்தப் பிரிவை முழுமையாக கலைக்க வேண்டும். 

சட்ட விதிமீறல்கள், பொதுமக்கள் மீதான அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள், பிரிவினைவாத குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு உடனடியாக தமிழக அரசு உரிய அரசாணை பிறப்பித்து பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற காவலர் உதவிப் பிரிவினை நிரந்தரமாக நீக்க முன்வர வேண்டும் என்றார் அவர். 

சாத்தான்குளம் சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பங்கு குறித்து, சிபிசிஐடி பிரிவு ஐ.ஜி. சங்கர் கூறுகையில், "சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 12 குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீதும் புகார் எழுந்துள்ளது. அதுகுறித்தும் விரைவில் விசாரணை நடத்த உள்ளோம்' என்றார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு மீது கூறப்படும் புகார் குறித்து தென் மண்டல ஐ.ஜி. முருகன் கூறுகையில், "பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு எந்த அதிகாரமும் கிடையாது. சாத்தான்குளம் வழக்கில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT