சென்னையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 24 பேர் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேபோன்று தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் இதுவரை 37,070 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவுக்கு இதுவரை 525 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை 7 பேர் பலியாகியுள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூன்று பேரும், தனியார் மருத்துவமனைகளில் ஐந்து பேரும் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பலி எண்ணிக்கை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.