கரோனா தடுப்பு நடவடிக்கை: ஈரோட்டில் இன்று மீன் மார்க்கெட்டுகள் இயங்கவில்லை
ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்டமாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்டமாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையிலிருந்து வந்த சிலரால் தொற்று பரவ தொடங்கியதை அடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வரும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் , வியாபாரிகள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
ஈரோடு மாநகர பொருத்தவரை ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 35க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதேபோன்று கருங்கல்பாளையம் காவிரி ரோட்டிலும் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும் அரசு அறிவித்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் இந்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட் இயங்காது என்ற உத்தரவை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட்டுகள் இயங்கவில்லை. மீன் மார்க்கெட்டுகள் பூட்டப்பட்டு இருந்தன. கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடந்தது. இதைப்போன்று மாவட்டம் முழுவதும் மீன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கவில்லை.