தற்போதைய செய்திகள்

மதுரையில் கரோனா நோயாளி பலியானது எப்படி? 

DIN

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய ஒருவர்,  சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவிற்கு முதல் பலி பதிவானது.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது. அதில் பாதிப்புள்ள நாடுகளுக்கோ, மாநிலங்களுக்கோ செல்லாத மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவர் அதிகாலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: மதுரையில் நேற்று முன்தினம் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 54 வயதுடைய நபருக்கு நேற்று மாலை முதல் சிகிச்சைகள் ஏற்கவில்லை என்றும் அவரது நிலை மோசமடைந்தது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

கரோனா பாதிப்பில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த நபர், ஈரோட்டில் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவந்த தாய்லாந்து நாட்டினருடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். அதனால் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மதுரையிலிருந்து எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்துள்ளோம்.

அவர் நாள்பட்ட நுரையீரல் நோய் பிரச்னைக்காக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவருக்கு அதிகளவு ரத்தக் கொதிப்பும், சர்க்கரை நோயும் இருந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

கரோனை வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்த நபர்  ஒரு கட்டட ஒப்பந்ததாரர். அதே பகுதியில் உள்ள ஒரு மசூதியில் நிர்வாகியாகவும் இருந்துள்ளதால் அடிக்கடி மசூதிக்கு சென்று வந்துள்ளார். அந்தவகையில், அவர் சந்தித்த நபர்கள், நெருங்கி பழகிய பக்கத்து வீட்டுக்காரர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

பக்கத்து வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். அங்கு அவருடன் தொடர்பில் இருந்த அத்தனை நபர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 30 வீடுகள் சுகாதாரத்துறை கண்காணிப்பில் வந்துள்ளது. அங்கு அதற்கான அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவி, மகனும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த, தொண்டைச்சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அவர்கள் வசிக்கும் தெருப்பகுதி, மசூதி, இதர பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் யார் மூலம் இவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தெரியாத நிலையில், இன்னும் யாருக்கெல்லாம் அவர் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதோ என்று அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT