தற்போதைய செய்திகள்

கேரளத்தில் தமிழக தோட்டத் தொழிலாளர்களுக்குச் சிக்கல்!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டப் பகுதிகளில் உள்ள எஸ்டேட் குடியிருப்புகளில் வசித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு, அத்தியாவசியப் பொருள்கள், அரசு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் உருவாகிய

கோ.ராஜன்


கேரள மாநிலம், இடுக்கி மாவட்டப் பகுதிகளில் உள்ள எஸ்டேட் குடியிருப்புகளில் வசித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் அரசு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. 

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் வண்டிப்பெரியாறு, பீர்மேடு, தேவிகுளம், உடுப்பன்சோலை, மூணாறு ஆகிய பகுதிகளில் உள்ள ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங்களில், தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். 

இவர்களில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு அவர்களது சொந்த ஊர்களிலேயே குடும்ப அட்டை மற்றும் வாக்குரிமை உள்ளது. சிலர் கேரளத்தில் குடும்ப அட்டை மற்றும் வாக்குரிமை பெற்றுள்ளனர்.

இவர்களைத் தவிர, தேனி மாவட்டப் பகுதிகளிலிருந்து தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று திருப்புகின்றனர்.

மாநில எல்லைகள் மூடல்: இந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் தேனி மாவட்டம் வழியாக தமிழக-கேரள எல்லை மூடப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால், தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை. கேரளத்தில் எஸ்டேட் குடியிருப்புகளில் தங்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் சிலரும் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பியுள்னர்.

பெரும்பாலோனோர் எஸ்டேட் குடியிருப்புகளிலேயே தங்கியிருந்து வருகின்றர்.
இந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக இரு மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஏலக்காய் தோட்டங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், கேரளத்தில் தங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தேனி மாவட்டத்தில் குடும்ப அட்டை வைத்துள்ள தொழிலாளர்கள், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வழக்கம் போல தங்களது ஊர்களுக்குச் சென்று நியாய விலைக் கடைகளில் பொருள்களை வாங்கிக் கொண்டு வர முடியாமலும், கேரளத்தில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு நீண்ட தூரம் நடந்து சென்றும் சிரமப்படுகின்றனர். 

கேரளத்தில் குடும்ப அட்டை, வாக்குரிமை இல்லாததால், கேரள அரசு மூலம் கரோனா தடுப்பு நிவாரணம் பெறுவதிலும், சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாததால் தமிழக அரசு வழங்கும் நிவாரண உதவிகளை பெறுவதிலும் தங்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது என்று கேரளம் வாழ் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் கூறினர்.

கட்டுப்பாடுகளை மீறும் அபாயம்: இந்த நிலையில், இடுக்கி மாவட்ட எஸ்டேட் பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதில் சிரமம் ஏற்படுவதாலும், அரசு நிவாரண உதவி பெறுவதற்காகவும், தங்களது குழந்தைகள், உறவினர்களை காணும் ஆர்வத்திலும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி, பாதுகாப்பற்ற முறையில் மலைப் பாதைகள் வழியாக சொந்த ஊர்களுக்கு நடை பயணமாகவே வந்துவிடும் அபாயம் உள்ளது.

எனவே, இடுக்கி மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் தமிழக தோட்டத் தொழிலாளர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடுப்பாடின்றி கிடைப்பதையும், அரசு நிவாரண உதவி கிடைப்பதையும், அவர்களது பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் இடுக்கி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

SCROLL FOR NEXT