தற்போதைய செய்திகள்

போலி சித்த மருத்துவர் தணிகாசலம் கைது 

கரோனா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்டு வந்த போலி சித்த மருத்துவர் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

DIN

சென்னை: கரோனா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்டு வந்த போலி சித்த மருத்துவர் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்தநிலையில் கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சென்னை ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவர் சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். 

இதனிடையே சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்டு வரும் தணிகாசலம், மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாத போலி சித்த மருத்துவர் என்று தமிழக சுகாதாரத்துறை அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மேலும் கரோனா தொற்று குறித்து சமூக ஊடகங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வரும் போலி சித்த மருத்துவர் தணிகாசலம்  மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை  இயக்குநர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

இந்த புகாரின் அடிப்படையில் தணிகாசலத்திடம் விசாரணை நடத்தி வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டது மற்றும் நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

SCROLL FOR NEXT