சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஓய்வு
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெற்றார்.
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெற்றார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த கே.ரவிச்சந்திரபாபு செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவுக்கு வழியனுப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளி்ட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவை அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் வரவேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, தற்போதுள்ள இளம் வழக்குரைஞர்கள் சிறந்த முறையில் நீதிமன்றத்தில் செயல்படுவதாக தெரிவித்தார்.
மேலும் இளம் வழக்குரைஞர்கள் வழக்குகள் தொடர்பாக நிறைய படிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்றார். கடந்த 9 ஆண்டுகளாக உயர்நீதிமன்ற நீதிபதியாக பணயாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். பின்னர் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
ஓய்வுபெற்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவர். கடந்த 1984-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்து மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தியிடம் ஜூனியராக பணியாற்றியவர்.
நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவின் ஓய்வைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 53-ஆக குறைந்துள்ளது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.