பொறியியல் கலந்தாய்வுக்கு தடைக் கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த அசோகன் தாக்கல் செய்த மனு, கரோனா தொற்று பரவல் காரணமாக ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வுகளின் முடிவுகள் வருவதற்கு முன்பே, தமிழக உயர்கல்வித்துறை செப்டம்பர் 17 ஆம் தேதி பொறியியல் சேர்க்கையான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களால், தமிழக பொறியில் சேர்க்கை கலந்தாய்வில் இடம்பிடித்த மாணவர்களின் இடங்கள் காலியிடங்களாகும். அந்த இடங்கள் நிரப்படுவது குறித்து அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனவே அந்தக் காலியிட்ங்களை நிரப்புவது குறித்து உரிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் வரை பொறியியல் கல்லூரிக்களுக்கான சேர்க்கைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்கள் விரும்பும் படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும்போது, காலியிடங்கள் ஏற்படுவது இயல்பானது. இது தொடர்பாக அரசு எப்படி கையாள்கிறது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுதார் கேட்டு அறிந்து கொள்ளலாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.