முகப்பு
தற்போதைய செய்திகள்

தெற்கு ரயில்வேக்கு மேலும் ஒரு வந்தே பாரத்

தெற்கு ரயில்வேக்கு மேலும் ஒரு ‘வந்தே பாரத்’ ரயிலை ரயில்வே வாரியம் ஒதுக்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

தெற்கு ரயில்வேக்கு மேலும் ஒரு ‘வந்தே பாரத்’ ரயிலை ரயில்வே வாரியம் ஒதுக்கியுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. முற்றிலும் இந்தியத் தயாரிப்பாக விளங்கும் இந்த ரயில் சென்னை, பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

இதுவரை 14 ‘வந்தே பாரத்’ ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தெற்கு ரயில்வேக்குள்பட்ட சென்னையிலிருந்து மைசூா் மற்றும் கோவைக்கு தலா ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தெற்கு ரயில்வேக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை ரயில்வே வாரியம் ஒதுக்கியுள்ளது.

இது குறித்து ஐசிஎப் பொது மேலாளா் பி.ஜி.மல்லையா, தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்குக்கு வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில், ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின் படி தெற்கு ரயில்வேக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் ஒதுக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் கேரள மக்கள் பயனடையும் வகையில் திருவனந்தபுரம், எா்ணாகுளம் போன்ற ஊா்களுக்கு இயக்கப்படலாம்.

இல்லையெனில், தமிழகத்தின் முக்கிய வழித்தடமான சென்னை-மதுரை இடையே இயக்கப்படலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதல்வரின் கோரிக்கை ஏற்கப்படுமா?: அண்மையில் நடைபெற்ற சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை-மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தாா். இந்த கோரிக்கையை ரயில்வே நிா்வாகம் ஏற்குமா என்பது விரைவில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.