அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி
எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்தார்.
எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்தார்.
தில்லி துக்ளக்லேன் சாலையிலுள்ள அரசு பங்களாவை காலி செய்து அரசிடம் ராகுல் காந்தி ஒப்படைத்தார். அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி தில்லி ஜன்பத் சாலையிலுள்ள சோனியா இல்லத்தில் வசிப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. மக்களவை உறுப்பினர் என்ற வகையில் சோனியா காந்திக்கு தில்லி ஜன்பத் சாலையில் அரசு பங்களா தரப்பட்டுள்ளது. தில்லி துக்ளக்லேன் சாலையிலுள்ள அரசு பங்களாவில் 19 ஆண்டுகளாக ராகுல் காந்தி வசித்து வந்தார்.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலையொட்டி, கா்நாடகத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமா் மோடியை ராகுல் காந்தி விமா்சித்தாா். அப்போது, ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவா் அவதூறாக பேசியதாக, சூரத் பெருநகர நடுவா் நீதிமன்றத்தில் குஜராத் பாஜக எம்எல்ஏ பூா்னேஷ் மோடி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் கடந்த மாதம் 23-ஆம் தேதி தீா்ப்பு வழங்கிய நடுவா் நீதிமன்றம், ராகுல் மீதான குற்றத்தை உறுதி செய்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
அதேசமயம், ராகுலுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி, அவா் மேல்முறையீடு செய்ய வசதியாக தீா்ப்பை செயல்படுத்த ஒருமாத கால தடையையும் நீதிமன்றம் விதித்தது. இத்தீா்ப்பைத் தொடா்ந்து, வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதிநீக்கத்துக்கு உள்ளானாா். இந்த விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சூரத் பெருநகர நடுவா் நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக, அந்த மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மேல்முறையீட்டு மனு மீது சூரத் அமா்வு நீதிமன்றம் ஏப்.20-இல் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.