வாணியம்பாடி அருகே ஊதுவத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
வாணியம்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
வாணியம்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி கம்பெனி இயங்கி வருகிறது. இதில் சுமார் 600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பணியில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு 9:45 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சத்தம் உணர்ந்துள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி, திருப்பத்தூர் நாட்றம்பள்ளி மற்றும் ஆம்பூர் ஆகிய ஊர்களில் இருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருந்தபோதிலும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து தொடர்ந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து காரணமாக சுமார் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் மூல பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது.
சம்பவம் குறித்து அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.