கர்நாடகம்: தேர்தல் பறக்கும் படையால் 40 கிலோ தங்கம் பறிமுதல்
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகத்தின் சிக்மகளூரு மாவட்டத்தில் 40 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி போன்றவற்றை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகத்தின் சிக்மகளூரு மாவட்டத்தில் 40 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி போன்றவற்றை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதிலும், அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிரடியாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகத்தின் சிக்மகளூரு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இன்று (ஏப்ரல் 20) ரூ.23.51 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 29 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் இன்று வரை மத்திய விசாரணை அமைப்புகள் ரூ.240 கோடி மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்துள்ளன.
இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியதாவது: இதுவரை மொத்தமாக ரூ.239.52 கோடி மதிப்பிலான பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் பணம் (80 கோடி), மதுபானம் (48 கோடி), தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் ( 78 கோடி), இலவசங்கள் (19 கோடி) மற்றும் போதைப் பொருள்கள் (16 கோடி) மதிப்பிலானவை ஆகும். இந்தப் பறிமுதல் தொடர்பாக 1,714 முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளன. தேர்தல் தேதிக்கு முன்னதாக ரூ.58 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.