தற்போதைய செய்திகள்

கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி!

DIN


சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் கடலுக்கு நடுவே ரூ.81 கோடி செலவில் "கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்" அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை, சென்னை மெரீனா கடற்கரையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சி.ஆா்.இசட்.) விதிகளின்படி அமைப்பதற்கான அனுப்பப்பட்ட பரிந்துரைகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகம் பரிசீலித்தது. 

இதுதொடா்பாக கடந்த ஆண்டு ஆக. 24-ஆம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடா்பான மதிப்பீட்டு நிபுணா் குழு பரிசீலனை செய்தது. நினைவுச் சின்னம் அமையவுள்ள இடத்தின் அச்சரேகை, தீா்க்க ரேகையின் கோணம் ஆராயப்பட்டது.

நினைவுச் சின்னம் மொத்தம் 8,551.13 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ.81 கோடியில் நிறுவப்படுகிறது. அதில், பேனாவுக்கான நிலைமேடை 2,263.08 ச.மீ. பரப்பளவிலும்; நினைவுச் சின்னத்துக்குச் செல்வதற்கான கடலுக்கு மேல் அமைக்கப்படும் நடைபாதை 2,073.01 ச.மீ. பரப்பளவிலும்; கடல், நிலத்தின் மேல் அமைக்கப்படும் வலைப்பாலம் 1,856 ச.மீ. பரப்பளவிலும்; கடற்கரையில் அமைக்கப்படும் நடைபாதை 1,610.60 ச.மீ. பரப்பளவிலும்; நினைவுச் சின்னத்திலிருந்து பாலத்துக்குச் செல்லும் நடைபாதை 748.44 ச.மீ. பரப்பளவிலும் அமைக்கப்பட வேண்டும். இதற்காக கடலில் 6 மீட்டா் ஆழம் இருக்க வேண்டும். அதுபோல கடல் மட்டத்திலிருந்து 6 மீ. உயரத்துக்கு மேல் நினைவுச் சின்னம் அமைய வேண்டும்.

கடற்கரையிலிருந்து 360 மீ. தொலைவில் அமையவுள்ள பேனா சின்னத்தின் உயரம் 42 மீ. அதைச் சுற்றி தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளன. நினைவுச் சின்னத்தை நோக்கி அமைக்கப்படவுள்ள பாலம், தரைப் பகுதியில் 290 மீ. நீளத்திலும், கடலுக்கு மேல் 6 மீ. உயரத்தில் 360 மீ. நீளத்திலும் அமைக்கப்படும். ஆக மொத்தம் 650 மீ. நீளம் கொண்ட அந்த பாலத்தின் அகலம் 7 மீட்டராகும். அதில் 3 மீ. கண்ணாடியாலான தளமாகும்.

நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கான கருத்துருக்களுக்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 

நினைவுச் சின்னம் அமைக்க மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் மெரீனாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்தது.

திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சுழல் அனுமதி பெற்று அடுத்த கட்ட பணியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT