புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி மல்யுத்த வீரர்களைப் பற்றி கவலைப்படுகிறார் என்றால், அவர் ஏன் இன்னும் அவர்களை சந்திக்காமலும் பேசமாலும் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை அடுத்து, தில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள், ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அபினவ் பிந்த்ரா போன்ற வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்தார். அப்போது போராட்டத்திற்கு துணை நிற்பதாக அவர்களிடம் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
பின்னர், பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியிடம் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, ஏனென்றால் இந்த பிரதமர் நரேந்திர மோடி மல்யுத்த வீரர்களைப் பற்றி கவலைப்படுகிறார் என்றால், அவர் ஏன் இன்னும் அவர்களை சந்திக்காமலும் பேசமாலும் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங்கை காப்பாற்ற அரசாங்கம் முயற்சிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள பிரியங்கா காந்தி, மல்யுத்த வீராங்கனைகளுடன் தேசம் நிற்கிறது, இதுபோன்ற பிரச்னைக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் குரல் கொடுத்திருப்பதை பார்ப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று பிரியங்கா காந்தி கூறினார்.
இதனிடையே, 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து தில்லி கன்னாட்பிளேஸ் காவல் நிலையத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.