முக்கியச் செய்திகள்

செத்த பிறகு இழப்பீடு எதற்கு? உயிருடனிருக்க வழி சொல்லுங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! 

KV

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை இந்தியா முழுவதும் தீராப் பிரச்சினையாக வெடித்துப் பரவிக் கொண்டிருக்கிறது. விவசாயம் பொய்த்துப் போய் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பின் இழப்பீடு வழங்குவதைக் காட்டிலும் விவசாயிகளை உயிருடன் வாழ வைப்பதற்கான வழிமுறைகளுக்கான திட்டங்களை மத்திய அரசு செயல் படுத்தலாமே என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2014 - 2015ம் ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலை 42 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பதிவு கழகம் வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

கடன் பிரச்னை, விளைச்சல் பாதிப்பு ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்ததுடன், ’’விவசாயிகளின் தற்கொலையை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டது'' என்று கூறியுள்ளது.

விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பது தொடர்பாக, தன்னார்வ அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: 

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாகவே கருதுகிறோம். வங்கிகளில் கடன் வாங்கும் விவசாயிகள், அதைத் திருப்பிச் செலுத்த இயலாததால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 

முந்தைய காலங்களைப் போலவே, விவசாயிகளின் மரணத்துக்குப் பிறகு, அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குவது, அந்தப் பிரச்னைக்கு உண்மையான தீர்வாகாது. மாறாக, விவசாயிகளின் மரணத்தை முன்கூட்டியே தடுக்கும் வகையில் மத்திய அரசிடம் திட்டங்கள் இருக்க வேண்டும். எனவே, மத்திய அரசு தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும். 

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள், பல ஆண்டு காலமாகவே நீடித்து வந்தாலும், அதற்கான பின்னணியைக் கண்டறிந்து, அவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படாதது வியப்பளிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சட்ட ஆலோசகர் பி.எஸ்.நரசிம்மா முன்வைத்த வாதம்: விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 2015-ஆம் ஆண்டைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் வெகுவாகக் குறையும். எனினும், அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், மற்ற திட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
 அதைத் தொடர்ந்து தன்னார்வ அமைப்பு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் காலின் கான்சால்வ்ஸ் வாதிடுகையில், ’’விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள், பல ஆண்டுகளாக அமலில் இருந்தாலும், முக்கியப் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது'' என்றார். அதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT