முக்கியச் செய்திகள்

இமானுவல் மாக்ரன், ஃப்ரான்ஸின் 39 வயது இளம் அதிபர்: அவரது வெற்றிக்கான பின்னணி...

கார்த்திகா வாசுதேவன்

இமானுவல் மாக்ரன் 39 வயது இளம் ஃப்ரெஞ்ச் அதிபர். இந்தியாவிலும் இப்படி யாராவது இளம் குடியரசுத் தலைவர்கள் வந்தால் நன்றாக இருக்குமோ?! என்று யோசிக்க வைக்கக்கூடிய அளவுக்கு ஃபிரான்ஸ் சார்பாக உலக அரங்கில் இவரது செயல்பாடுகள் கவனம் ஈர்க்கின்றன. இத்தனைக்கும் இம்மானுவல், ஃப்ரான்ஸ் அரசியல் களத்தில்  பெரிய, பெரிய தேசியக் கட்சிகளின் வலிமையான பின்புலங்கள் கொண்டவரல்ல. ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தில் சிவில் அதிகாரியாகப் தன் பணியைத் தொடங்கியவர் பின்னர் படிப்படியாக பல மில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடக்கும் வங்கியொன்றின் முதலீட்டு வங்கியாளராக மாறி அங்கிருந்து ஃபிரான்ஸின் பொருளாதார மந்திரியாகி இன்று ஃப்ரான்ஸ் அதிபராகி விட்டார். ஃப்ரெஞ்சு அரசியல் களத்தில் நடுநிலைவாதியான மாக்ரனை நான்கு வருடங்களுக்கு முன்பு வரை ஃப்ரான்ஸ் மக்களுக்கு யாரென்று  தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றோ ஃப்ரான்ஸ் மக்களின் மனம் கவர்ந்த உலகின் இளமையான அதிபர்களில் ஒருவராகி இருக்கிறார்.

தேர்தலின் போது எதிர்கட்சிகளும், அரசியல் விமரிசகர்களும் கூறியவாறு மாக்ரனுக்கு எந்த விதமான அரசியல் முன் அனுபவங்களோ, பயிற்சிகளோ கிடையாது. மரபார்ந்த புகழ் மிக்க ஃப்ரான்ஸ் தேசிய கட்சிகளின் பின்புலமும் மாக்ரனுக்கு இல்லை. இதற்கு முன்பு இவர் எந்த ஒரு அரசியல்கட்சியின் சார்பாகவும் ஃப்ரான்ஸில் தேர்தல்கள் எதுவொன்றிலும் கலந்து கொண்டதே இல்லை. இவருக்கென ஓட்டு வங்கியும் கிடையாது. ஆனால் திடீரென ஃப்ரான்ஸ் நாட்டின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு. மக்கள் நலனுக்காக பல திட்டங்களை முன்னிறுத்தி ‘என் மார்ச்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். மாக்ரனின் திட்டங்கள் அனைத்தும் பலராலும் விமரிசிக்கப் பட்டாலும் அவை மக்களுக்குப் பிடித்தமானவையாக மக்களது நலன் நாடும் திட்டங்களாக அமைந்ததால் அவருக்கு கிடைத்த ஏகோபித்த மக்கள் ஆதரவில் இன்று அவர் ஃப்ரெஞ்சு அதிபராகி இருக்கிறார்.

39 வயதான இம்மானுவல் மாக்ரன் மணந்து கொண்டது தன்னை விட 24 வயது மூத்தவரான பிரிகிட் ட்ரோனியக்ஸை. முன்னாள் ஆசிரியையான பிரிகிட் மாக்ரனைச் சந்திக்கும் போது மாகரனுக்கு வயது 15. திருமண வயது வரும் வரைக்குமான மூன்று ஆண்டுகள் காத்திருந்து மாக்ரனுக்கு 18 வயதானதும் இருவரும் மணம் செய்து கொண்டனராம். தனது மனைவி குறித்துப் பேசும் போது தேர்தல் நேரத்தில் தனது பிரச்சார உரைகளைத் தயாரித்து உதவியதில் பெரும்பான்மையான பங்கு மனைவிக்கே இருப்பதாக மாக்ரன் குறிப்பிடுகிறார். 

ஒரு சிவில் சர்வீஸ் பணியாளராக இருந்து சடாரெனப் ஃப்ரெஞ்சு அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தேர்வானது மாக்ரனின் அரசியல் கவர்ச்சிகளில் ஒன்று. திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போலவே ஒரு சாமனியன் அதிபராவதை ஃப்ரெஞ்சு மக்களும் விரும்பினர். ஏனெனில் மாக்ரன் தனது பிரச்சார உத்திகளில் முன் வைத்தது பெரும்பாலும் முரட்டுத் தன்மையான ஃப்ரெஞ்சு அரசியல் கொள்கைகளுக்கு எதிரான வாதங்களையே. எனவே தான் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பொருளாதார மந்திரியாக அனுபவம் பெற்று மற்றபடி பெரிதாக ஃப்ரெஞ்சு அரசியலில் அறிமுகமற்றிருந்த போதிலும் மாக்ரன் மக்களின் நம்பிக்கையை வென்று அதிபராகி இருக்கிறார்.

வேலையில்லாத் திண்டாட்டத்தை 7 % க்கும் குறைவாகக் குறைப்பது மாக்ரனின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. முந்தைய ஃப்ரான்ஸ் அதிபரான ஃப்ராங்வா ஹாலண்ட் தோல்வி கண்ட விவகாரம் இது. ஐரோப்பியச் சந்தையில் ஃப்ரான்ஸ் இழந்த இடத்தை மீண்டும் உருவாக்கி, ஃபிரான்ஸை மட்டுமே மையப்படுத்தும் ஒற்றைச் சந்தை முறையை உருவாக்குவதே தனது லட்சியமாக மாக்ரன் அறிவித்துள்ளார்.

மாக்ரன் பொருளாதார ரீதியாக தாராளவாதத் தன்மை கொண்டவராக தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்டுள்ளார். சார்புடைய அல்லது சார்பற்ற என எந்த மாதிரியாக இருந்தாலும் பொருளாதாரப் பிரச்னைகளில் தாராளவாதத் தன்மையைப் பின்பற்றினாலும் சமூகப் பிரச்னைகளில் இடது சார்புடையராகவும் மதச்சார்பற்றை ஃபிரான்ஸ் தேசத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் அனுமதி அளித்து சமத்துவம் மற்றும் குடியேற்ற விதிமுறைகளில் முற்போக்குத் தன்மையைக் கடைபிடிக்கும் மக்கள் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிறார். அதுவே அவரது வெற்றிக்கான காரணமாகக் கூட இருக்கலாம்.

அதுமட்டுமல்ல மாக்ரன் 120,000 பொதுத்துறை வேலைகளை குறைக்க விரும்புகிறார், பொது செலவினங்களை 60 பில்லியன் யூரோக்கள் (65 பில்லியன் டாலர்) ஆகவும் குறைக்க விரும்புகிறார், மேலும் பில்லியன் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறார். அதோடுமட்டுமல்ல; "தோல்வியுற்ற" மற்றும் "வீணான" பிரெஞ்சு அரசியல் அமைப்புகளை மாற்றுதல், தொழிலாளர் சட்டங்களை நிதானப்படுத்துதல், சமூக இயக்கத்தை ஊக்குவித்தல், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் ஒரு யூரோ அரசாங்கத்தை ஸ்தாபித்தல் ஆகியவையும் மாக்ரனின் அரசியல் வியூகங்களில் அடங்கும்.

ஃபிராஞ்சுப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஃப்ரான்ஸின் சார்பாக ஒலிக்கும் குரல்கள் வலுப்படுத்தவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான வணிக நட்பு நடவடிக்கைகளை மாக்ரன் தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணம் இருப்பதை ஆரோக்கியமானதாக ஃப்ரெஞ்சு மக்கள் கருதுகின்றனர்.

பாதுகாப்பு செலவினங்களை உயர்த்துவதற்காக, 10,000 காவல் அதிகாரிகளை வேலைக்கு அமர்த்தவும், இஸ்லாமிய அரசுக்கு எதிராக ரவுண்ட் தி கிளாக் முறையில் வேலை செய்யும் ஒரு அணியை உருவாக்கவும் அவர் முன்மொழிந்தார். அதுமட்டுமல்ல ஆசிரியப் பணியில் இருப்போரின் ஊதியம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று கருதுபராகவும் மாக்ரன் இருக்கிறார். அவரது மனைவி முன்னாள் ஆசிரியை என்பது அதற்கொரு காரணமாக இருக்கலாம். என்று கருதப்படுகிறது.

தனது பரந்த வெளியுறவுக் கொள்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்முடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும், ரஷ்யா, ஈரான், துருக்கி மற்றும் சவூதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்திக் கொண்டு, சிரியா மற்றும் வேறு இடங்களில் நீடிக்கும் போர் விவகாரங்களை முடிவுக்குக் கொண்டு வரத் தக்க அரசியல் தீர்வைக் கொண்டு செயலாற்றுவதற்கு உறுதியளிப்பதாக கூறும் மாக்ரான் உலக நாடுகளிடையே ஃப்ரான்ஸ் அதிபராகத் தனது செயல்பாடுகளில் ஒரு இராஜதந்திர தொனியை பின்பற்றுகிறார்.

மேக்ரோன் டிசம்பர் 21, 1977 அன்று ஃப்ரான்ஸில் வடக்கு நகரமான அமியென்ஸில் ஃபிராங்வா நோஜூஸ் என்ற மருத்துவர் மற்றும் நரம்பியல் பேராசிரியரான ஜீன்-மைக்கேல் மேக்ரோன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

ஒரு சிவில் சர்வீஸ் பணியாளராகத் தனது வேலையைத் தொடங்கிய மாக்ரன் இன்று தனது ஆக்கப்பூர்வமான உறுதி மொழிகள் மற்றும் ராஜதந்திரத் தனமான கோட்பாடுகளால் உலகின் முக்கியமான இளம் அதிபர்களில் ஒருவராகக் கவனிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார். மாக்ரனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் ஹாலண்ட் குடியரசுக் கட்சியின் தலைவரான ஃப்ராங்வா ஃபில்லோன். அலன் யூப்பே, மிதவாதியான பிராங்வா பெய்ரூ, முன்னாள் பிரதமரான மானுவல் வால்ஸ் ஆகியோர் இருப்பதாகக் கருதப் படுகிறது. இத்தனை பேரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகியே மாக்ரன் ஃப்ரான்ஸ் அதிபராகி இருக்கிறார். முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா கூட மாக்ரனின் வெற்றியின் பின்னணியாகக் கருதப் படுவதாகக் கூறுகிறார்கள்.

Image courtsy: daily mirror. google.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT