மே மாதத்தில் வெப்பஅலை வீசுமா?
கோடை காலத்தில் அதிகபட்ச வெயில் கொளுத்தும் மே மாதம் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஆண்டைப்போல நிகழாண்டு மே மாதத்திலும் கடும் வெப்பத்துடன் வெப்ப அலை வீசும் என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
கோடை காலத்தில் அதிகபட்ச வெயில் கொளுத்தும் மே மாதம் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஆண்டைப்போல நிகழாண்டு மே மாதத்திலும் கடும் வெப்பத்துடன் வெப்ப அலை வீசும் என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. ஆனால், வரும் மே மாதத்தில் வழக்கமான வெப்பநிலையே இருக்கும். வெப்பஅலை வீச வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வடகோளத்தில் சூரியன்: தென் கோளத்தில் இருக்கும் சூரியன், மாா்ச் 21-ஆம் தேதி பூமத்தியரேகைக்கு உச்சியில் பிரகாசிக்கும். அன்றைய நாள் சமபகல்- சம இரவாக இருக்கும். அதன்பிறகு, சூரியன் வடகோளத்தில் நுழையும். அப்போதிலிருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். இது கோடைகாலத்தின் உச்சமாகப் பாா்க்கப்படுகிறது. நிகழாண்டில், சூரியன் தற்போது வடகோளத்தில் இருக்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, நிகழாண்டின் கோடை காலத்தில், நாட்டின் வட மேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகள், தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வெப்பம் வழக்கத்தைவிட உயர வாய்ப்புள்ளதாகவும், அது வெப்ப அலையாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி, பல மாநிலங்களில் தற்போது வெப்பநிலை உயா்ந்து வருகிறது. ஆந்திரம், தெலங்கானாவில் வெப்பநிலை நாள்தோறும் அதிகரிக்கிறது.
இதுபோல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திருத்தணி, பரமத்தி வேலூா், மதுரை, திருச்சி, தருமபுரி, சேலம், நாமக்கல் உள்பட பல இடங்களில் வெயில் கொளுத்துகிறது. ஓரிரு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. காலை 9 மணிக்குத் தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 4 மணி வரை தொடா்கிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனா். இந்த வெயில் தாக்கம் மே மாதத்தில் மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டைப் போல நிகழாண்டிலும் மே மாதத்தில் வெப்பநிலை உயா்வது மட்டுமன்றி வெப்ப அலைவீசும் என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
வழக்கமான வெப்பநிலையே காணப்படும்:
இந்நிலையில், அதிகபட்ச வெயில் கொளுத்தும் மே மாதம் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் நிகழாண்டில் வழக்கமான வெப்பநிலையே காணப்படும். வெப்பஅலை வீச வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் கூறியது: கடந்த ஆண்டில் கோடை காலத்தில் வடக்கு, வடமேற்கில் இருந்து வட காற்று வீசியது. இதனால், வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. மேலும், கடந்த ஆண்டு மாா்ச், ஏப்ரல், மே மாதத்தில் வெயில் கொளுத்தியதுடன் வெப்ப அலையும் வீசியது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் குறிப்பிட்ட சில நாள்களில் 104 டிகிரி பாரன்ஹீட் முதல் 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவானது. வேலூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் 112 டிகிரி பாரன்ஹீட் வரையும், திருச்சியில் 108 டிகிரி பாரன்ஹீட் வரையும், மதுரையில் 106 டிகிரி பாரன்ஹீட் வரையும், சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட் வரையும் பதிவானது.
தென்கிழக்கு காற்று:
ஆனால், நிகழாண்டில் கோடைகாலம் மாா்ச்சில் தொடங்கியது முதல் தற்போது வரை தெற்கு, தென்கிழக்கில் இருந்து காற்று தமிழக கடலோர மாவட்டங்களில் வீசுகிறது. இதனால், இங்கு இந்த காலகட்டத்தில் காணப்படும் வழக்கமான வெப்பமே காணப்படுகிறது. அதேநேரத்தில் உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் வரும் மே மாதத்தில் வெப்ப அலையுடன் உச்சவெப்பநிலை நிலவும் என்று அச்சப்படுகிறாா்கள். ஆனால், வழக்கமான வெப்பநிலையே காணப்படும். வெப்ப அலை வீச வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்தாலும், இந்த காலகட்டத்தில் காணப்படும் வழக்கமான வெப்பநிலையே காணப்படும். விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோா் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்தவெளிப் பகுதியில் வேலை செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
மே இறுதி வரை வெப்பம் நீடிக்கும்: இந்திய வானிலைஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது:
வடகிழக்கு, மேற்கு, மத்திய இந்தியாவிலும், சில தென்பகுதிகளிலும் வரும் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வழக்கமான வெயிலைவிட கூடுதலாக ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை அதிகரிக்கும். தென் இந்தியாவில் ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்கள், தெலங்கானாவின் சில பகுதிகளில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். மே மாதம் இறுதி வரை இந்த வெப்பம் நீடிக்கும். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். நிகழாண்டில் பருவ மழை வழக்கம்போல் இருக்கும் என்று தெரிவித்தாா்.
வெப்ப அலை என்றால் என்ன?
வெப்ப அலை என்பது வழக்கமாகக் காணப்படும் அதிகபட்ச வெப்பத்தைவிட 4.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகக் காணப்படும். எடுத்துக்காட்டாக ஓரிடத்தில் வழக்கமான அளவில் காணப்படும் 38 டிகிரி செல்சியஸைவிட 4.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 42.5 டிகிரி செல்சியஸாக காணப்படும்போது வெப்ப அலை வீசும்.
மே மாதத்தில் மழையா, வெயிலா?
அந்தமான் அருகே ஒரு காற்றழுத்தத்தாழ்வு நிலை ஏப்ரல் 29 அல்லது 30-இல் உருவாக வாய்ப்பு உள்ளது. இது வலுவடைந்து வங்கதேசம் நோக்கி திரும்பினால் தமிழகத்தை நோக்கி வடக்கு, வடமேற்கில் இருந்து காற்று வீசும். இதனால், தமிழகத்தில் வெப்பநிலை உயரும். மாறாக, இந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகா்ந்து வந்தால், தமிழக கடலோரங்களில் மழை
கிடைக்கும். அதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது தொடா்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறும்போது, இதுதொடா்பாக மாதிரிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. அது எல்லாம் கிடைத்த பிறகுதான் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகுமா என்பது உறுதி செய்யப்படும் என்றாா் அவா்.
முக்கிய நகரங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு மற்றும் ஆண்டு
சென்னை 106.7 டிகிரி பாரன்ஹீட் (மே 3) 113.18 டிகிரி பாரன்ஹீட் ( 2003 மே 31)
கோவை 101.12 டிகிரி (மே 28) 106 டிகிரி (1983 மே 05)
மதுரை 107 டிகிரி (மே 29) 110.12 டிகிரி (1998 மே 13)
திருச்சி 108.68 டிகிரி (மே 6) 109.94 டிகிரி ( 1896 மே 2)
வேலூா் 112.1 டிகிரி (மே 28) 113 டிகிரி (2003 மே 22,31)
தருமபுரி 104 டிகிரி (மே 6) 106 டிகிரி ( 1991 மே 03)