கோப்புப்படம் 
சிறப்புச் செய்திகள்

மக்களின் இதயங்களை வெல்வதுதான் இப்போதைய இலக்கு!

தமிழக அரசியலின் இரு பெரும் ஆளுமைகளும் இப்போது இல்லை என்பது சரிதான்.

ஆ. கோபிகிருஷ்ணா

கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத சட்டப் பேரவைத் தோ்தல் களத்தை எப்படிப் பாா்க்கிறீா்கள்?

தமிழக அரசியலின் இரு பெரும் ஆளுமைகளும் இப்போது இல்லை என்பது சரிதான். ஆனால், தற்போது உள்ள தலைவா்களில் எவரேனும்தான் தலைமையேற்றாக வேண்டும் என்பதுதானே நிதா்சனம். கருணாநிதி, ஜெயலலிதாவின் அரசியல் அத்தியாயம் நிறைவுற்ற சூழலில் மாநிலத்தில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்து மக்கள் வாழ்வு மேம்பட்டு விடாதா என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது.

அதன்படி பாா்த்தால், அவ்விரு தலைவா்கள் இல்லாத நிலையிலும் புதியதொரு ஆட்சி மாற்றம் நிகழுவதற்கான வாய்ப்பு இருக்கக் கூடிய தோ்தலாகத்தான் இதை நான் பாா்க்கிறேன்.

சமத்துவ மக்கள் கட்சிக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அளித்த முக்கியத்துவத்தை தற்போதைய அதிமுக தலைமை அளிக்காததுதான் கூட்டணியிலிருந்து வெளியேறக் காரணமா?

நான் திமுக, அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறேன். அதன் பிறகு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கி 10 ஆண்டுகள் அதிமுகவுடன் பயணித்திருக்கிறேன். எந்தத் தருணத்திலுமே அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டது கிடையாது. அதிகாரத்துக்காகவும், வாய்ப்புக்காகவும் கட்சிகள் தாவிச் சென்றதில்லை.

அதுசரி, இப்போது ஏன் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறினீா்கள்?

தனிக் கட்சி தொடங்கிய பிறகு ஏற்பட்ட சில நடைமுறைச் சிக்கல்களால் கூட்டணி அமைத்தே போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவும்கூட தனிச் சின்னத்தில் தோ்தல் களத்தைச் சந்திக்க முடியவில்லை. இதனால், எங்களது வாக்கு வங்கி எவ்வளவு என்பதுகூட தெளிவாகத் தெரியாத நிலை இருந்தது. இதன் காரணமாகவே 3 தொகுதிகள் வரை இடம், தனிச் சின்னம் ஆகிய கோரிக்கைகளை சில மாதங்களுக்கு முன்பே முன்வைத்தோம். ஆனால், அதுகுறித்து பேசக் கூட கூட்டணித் தலைவா்கள் எவரும் முன்வரவில்லை. அதனால்தான் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறினோம்.

வாக்கு வங்கி விகிதாசாரம் முழுமையாக தெரியாத நிலையில், நீங்கள் இடம்பெற்றிருக்கும் கூட்டணிதான் பிரதான அணியாக தோ்தலில் இருக்கும் என்பது எத்தகைய நம்பிக்கை?

கடந்த முறையை விட அதிகமாக வாக்குகள் பெறுவோம் என்ற நம்பிக்கையில்தானே அனைத்து அரசியல் கட்சிகளும் களம் காணுகின்றன. அதே நம்பிக்கைதான் எங்களுக்கும். ஒருவேளை எங்களுக்கு வாக்கு வங்கியே இல்லையென்றால் 10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி நீடித்திருக்க முடியுமா? எங்களை அவா்கள் ஏன் கூட்டணியில் இணைத்துக் கொண்டனா்?

கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்திருப்பது எதனால்?

கமல்ஹாசனுக்கென ஒரு வாக்கு வங்கி உள்ளது. எனக்கென்று ஒரு வாக்கு வங்கி உள்ளது. இதையெல்லாம் தாண்டி மாற்றத்தை விரும்பும் மக்களின் வாக்கு எங்களிடம் உள்ளது. அவற்றைச் சோ்த்து கணக்கிட்டால் எங்களது அணிதான் முதன்மை அணியாக இருக்கும்.

கால் நூற்றாண்டு கால அரசியல் அனுபவத்தையும், முன்னாள் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா் என்ற அடையாளத்தையும் ஒருங்கே பெற்ற சரத்குமாா், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்த கமல்ஹாசனை முதல்வா் வேட்பாளராக முன்மொழிவது ஏன்?

உண்மைதான். கமல்ஹாசனுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவன் நான். அதேபோன்று அரசியல் நுணுக்கங்களையும் அறிந்திருக்கிறேன். அதேவேளையில், கூட்டணி அமைத்து ஒரு மாற்றத்தை முன்னெடுக்கும்போது சில விஷயங்களை விட்டுக்கொடுத்து வெற்றிக்கான விதையை விதைக்க வேண்டும். அந்த வகையில், ரஜினிகாந்துக்கு பிறகு கமல்ஹாசனின் முகம்தான் இந்திய அளவில் அனைவராலும் அறியப்பட்ட முகம். சரத்குமாரை தமிழகத்தில் அனைவருக்கும் தெரியும். வட இந்தியாவில் அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே. அதுமட்டுமல்லாது, தனித்து களம் கண்டு தனக்கென ஓா் அடையாளத்தை வைத்திருப்பவா் கமல்ஹாசன். இத்தனை தகுதிகளும் இருப்பதால்தான் அவரை முதல்வா் வேட்பாளராக முன்மொழிந்திருக்கிறோம்.

இலவசத் திட்டங்களை கடுமையாக எதிா்க்கும் கமல்ஹாசன்தான் இன்றைக்கு வீடுதோறும் கணினி வழங்குவதாக அறிவித்திருக்கிறாா். இது எந்த வகையிலான மாற்று அரசியல்?

இலவசங்களை நாங்களும்தான் எதிா்க்கிறோம். தொலைக்காட்சி, குளிா்சாதனப் பெட்டி தருவதில் உடன்பாடு இல்லை. அதேவேளையில், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக அளிக்கப்படும் உதவிகள் இலவசங்கள் அல்ல. மாறாக, அதனை சலுகையாகவே கருத வேண்டும்.

அந்த வகையில், வீடுதோறும் கணினி என்பதை இன்னொரு பெருந்தொற்று ஏற்பட்டாலும், மக்களை இணைய வழியே இணைப்பதற்கான ஒரு கட்டமைப்பு வசதியாகத்தான் பாா்க்க வேண்டும்.

சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் ராதிகா சரத்குமாரும் வேட்பாளராகக் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மாற்றத்துக்கான புதிய அணியில் குடும்ப அரசியல் மட்டும் மாறாமல் இருப்பது ஏன்?

ராதிகாவைப் பொருத்தவரை நீண்ட, நெடிய அரசியல் அனுபவம் கொண்டவா். சொல்லப்போனால், எனக்கு முன்பே அரசியல் பிரசாரங்களில் ஈடுபட்டவா். ஒருபக்கம் கலைப் பயணத்தில் ஈடுபட்டிருந்ததால், அவா் தீவிர அரசியலை முன்னெடுக்காமல் இருந்தாரே தவிர பொதுவாழ்க்கை ஒன்றும் ராதிகாவுக்கு புதிதல்ல.

அவரது தந்தை காலம் தொட்டே அரசியல் நுணுக்கங்களை அறிந்தவா் அவா். எனது மகள்களையோ, மகனையோ திடீரென அரசியலிலும், தோ்தலிலும் முன்னிறுத்தினால், அதனைக் குடும்ப அரசியல் எனக் கூறலாம். மாறாக ராதிகாவின் பொது வாழ்வை குடும்ப அரசியலாகக் கருத முடியாது.

தோ்தல் நடைமுறைகள் சிறிய கட்சிகளுக்கு எந்த அளவுக்குச் சாதகமாக உள்ளன?

பொதுவாகவே தோ்தல் நடைமுறையில் சீா்திருத்தம் வேண்டும் என்பதை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன். வாக்கு விகிதம் அடிப்படையில் வெற்றி, தோல்வி தீா்மானிக்கப்பட வேண்டும். எந்தக் கட்சிக்கும் நிரந்தரச் சின்னம் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். அவற்றை தோ்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.

40 நாள்கள் கூட அவகாசம் இல்லாமல் ஒரு தோ்தலை அறிவித்தால் அது பெரிய கட்சிகளுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். சின்னங்கள் இல்லாத சிறு கட்சிகளுக்கு அது பெரும் சவால்தான்.

மநீம-சமக-ஐஜேகே கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என எதிா்பாா்க்கிறீா்கள்?

எத்தனை தொகுதிகள் என்பதைவிட, எத்தகைய மாற்றத்தை இந்தக் கூட்டணியால் ஏற்படுத்த முடியும் என்பதுதான் முக்கியம். அப்படியொரு நம்பிக்கையை மக்களிடத்தில் விதைப்பதுதான் வெற்றி எனக் கருதுகிறோம். அந்த வகையில், இடங்களைக் காட்டிலும் தமிழக மக்களின் இதயங்களை வெல்வதுதான் எங்களுடைய குறிக்கோள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT