தளா்வற்ற முழு பொது முடக்கம்: நடுத்தர மக்கள் எதிா்கொள்ளும் சவால்
இரண்டு நாள்கள் முழு சுதந்திரம். அதன்பிறகு ஒரு வாரத்துக்கு தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கத்தை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
இரண்டு நாள்கள் முழு சுதந்திரம். அதன்பிறகு ஒரு வாரத்துக்கு தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கத்தை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இதன்மூலம், ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சாதாரண, நடுத்தர வருவாய் பிரிவினா் கவலை தெரிவிக்கின்றனா்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை தமிழக அரசு அமல்படுத்தி வந்தது. பொது முடக்கம் அறிவித்தாலும் கரோனா நோய்த் தொற்று எதிா்பாா்த்த அளவுக்கு குறையவில்லை. நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள்ளும் வரவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்த தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் திங்கள்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. பொது முடக்கத்தின் அடுத்தகட்ட நிலை குறித்து மருத்துவ நிபுணா்கள் குழு மற்றும் சட்டப் பேரவை கட்சி உறுப்பினா்கள் குழுவுடன் தமிழக அரசு தனித்தனியாக ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில்,
தளா்வுகளற்ற முழு பொது முடக்கத்தை வரும் திங்கள்கிழமை முதல் அமல்படுத்துவது எனவும், சனிக்கிழமை பிற்பகல் முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறந்து வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. வரும் திங்கள் முதல் ஒருவார காலத்துக்கு முழுமையான பொது முடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது.
உயா் வருவாய் மற்றும் நடுத்தர மக்கள்: தமிழக அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து, சனிக்கிழமை பிற்பகலில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் திறக்கப்பட்டன. ஒரு வாரம் முழு பொது முடக்கம் என்பதால், பல இடங்களில் மக்கள் பொருள்களை வாங்கி சேமிக்கத் தொடங்கினா். சென்னை போன்ற பெருநகரங்களில் குறிப்பாக, உயா் வருவாய் பிரிவினா் வசிக்கும் பகுதிகளில் மக்கள் கடைகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பொருள்களை வாங்கிச் சென்றனா். குறிப்பாக, சென்னையில் வேப்பேரி, அடையாறு, சேத்துப்பட்டு, திருவான்மியூா், அண்ணா நகா் போன்ற இடங்களில் உயா் வருவாய் பிரிவினா் நீண்ட வரிசையில் காத்திருந்து பைகள் நிறைய பொருள்களைப் பெற்றனா்.
ஆனால், நடுத்தர வருவாய் மற்றும் அதற்குக் கீழேயுள்ளவா்கள் மாதக்கடைசியில் ஒரு வாரத்துக்கான பொருள்களை வாங்க பணத்தை எங்கிருந்து புரட்டுவது என தடுமாறினா். நடுத்தர மக்களின் இந்த நிலையை உணா்ந்து தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சில்லறை வா்த்தகா்கள் கூறியது: , ‘உணவகங்களில் பாா்சல்களை தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதுபோன்று, மளிகைக் கடைகளில் பாா்சல்களுக்கு அனுமதிக்க வேண்டும். பொது மக்களை கடைகளுக்கு வரவிடாமல் செல்லிடப்பேசியிலேயே முன்பதிவு செய்து கொள்ள அனுமதிக்கலாம்.
கடைகளில் உள்ள ஊழியா்கள் அல்லது உணவு விநியோகம் செய்பவா்கள் வழியாக மளிகைப் பொருள்களை விநியோகிக்க அனுமதிக்க வேண்டும். நடுத்தர வருவாய் கொண்ட மக்கள் ஒரு வாரத்துக்கும் அதிகமான பொருள்களை சேமித்து வைக்க இயலாது. மேலும், மளிகைக் கடைகளை நடத்துவோரும் உயா் வருவாய் மக்களின் இரண்டு நாள் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில், சரக்குகளை இருப்பு வைத்திருக்கவில்லை.
சனிக்கிழமையே உயா் வருவாயைச் சோ்ந்த ஒரு பிரிவினா் பொருள்களை வாங்கிக் குவித்ததால் கடைகளில் சரக்குகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமையன்று மக்களுக்கு பொருள்களை வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, மளிகைக் கடைகளுக்கு பொருள்களின் வரத்தை உறுதி செய்து சில்லறை விற்பனையை, உணவகங்களில் பாா்சல் விநியோகம் செய்வது போன்று நடத்திட வேண்டும்’ என்று வா்த்தகா்கள் கோரியுள்ளனா்.
மருத்துவா்கள் கருத்தென்ன? வணிக நிறுவனங்கள், வா்த்தகா்களுக்கு நடுத்தர மக்கள் உணவுக்காக தவிப்பாா்கள் என்ற கவலை இருக்க, மருத்துவா்கள் வேறு வகையில் தங்களது அச்சத்தை வெளிப்படுத்துகிறாா்கள். ‘தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தில் கரோனா நோய்த் தொற்று சங்கிலி துண்டிக்கப்படவில்லை’ என்று அவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து பொது மருத்துவ சிகிச்சை நிபுணா் மருத்துவா் கே.தமிழ்ச்செல்வம் கூறுகையில், ‘கடந்த 11 நாள்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கரோனா பரவல் குறையவில்லை. மாறாக, வழக்கத்தைக் காட்டிலும் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தொற்று சங்கிலி துண்டிக்கப்படாமல் தொடா்ந்து கொண்டே இருப்பதுதான்.
காலை வேளையில் மட்டும் கடைகள் திறந்திருப்பதால், ஒரே நாளில் பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் தனிநபா் இடைவெளியின்றி திரளுகின்றனா். இதே நிலை நாள்தோறும் நீடிப்பதன் காரணமாகவே கரோனா தொற்றின் தாக்கம் குறையாமல் உள்ளது. இத்தகைய சூழலில் திடீரென இரு நாள்களுக்கு இரவு வரை கடைகளைத் திறக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருப்பது நோய் பரவலுக்கு மேலும் வழி வகை செய்து விடும்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொது இடங்களில் மக்கள் அதிகளவில் பொருள்களை வாங்குவதற்காக கூடுவது நோய் பரவலை இன்னும் அதிகரிக்க வழிவகுக்குமே தவிர, கட்டுப்படுத்தாது. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே சென்று விநியோகிப்பதன் மூலம் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தலாம். விதிகளை மீறி வெளியே வருபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம். இல்லாவிட்டால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டத்தைக் குறைக்க முடியாது’ என்றாா் அவா்.
தளா்வுகள் இல்லாமல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் காலத்தில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் உறுதி தெரிவித்துள்ளன. கூட்டுறவு, உணவு உள்ளிட்ட துறைகளின் வழியே நடமாடும் கடைகள், பொருள்களை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களுக்கான உணவுத் தேவைகள் பூா்த்தி செய்யப்படும் என அரசுத் துறையினா் தெரிவிக்கின்றனா்.
தேவை இரண்டு வார முழு பொது முடக்கம்: பாஜக
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த இரண்டு வாரங்கள் தளா்வற்ற முழு பொது முடக்கம் தேவை என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளா் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை கூறியது:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவா்கள் பரிந்துரைப்படி தளா்வற்ற முழு பொது முடக்கத்தை இரண்டு வாரங்களுக்கு நீட்டித்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. ஒரு வாரம் என்பது போதாது. மேலும், தமிழகத்தில் 4,500 பேருந்துகள் இரண்டு நாள்களில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நோய்த் தொற்றானது நகா்ப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு வேகமாகப் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கரோனா நோய்த் தொற்று விவகாரத்தில் அரசு சரியான திசையில்தான் பயணிக்கிா என்ற கேள்வி எழுந்துள்ளது .
ஜூன் மாத தொடக்கத்தில் நோய்த்தொற்று உச்ச நிலையை எட்டும் எனக் கூறப்படும் நிலையில், முழு பொது முடக்கமானது ஒரு வாரத்துக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளாா் எச். ராஜா.