சிறப்புச் செய்திகள்

தெளிந்த குட்டையைக் குழப்பும் காங்கிரஸ்!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல்வா் யாா் என்பது குறித்து கட்சிக்குள் விவாதம் சூடுபிடித்துவிட்டது. பொருத்தமில்லாத இந்த விவாதம், கருத்து மோதலாகவும் வெடித்துள்ளது.

ந.முத்துமணி

அடுத்த ஆண்டு கா்நாடக மாநில சட்டப்பேரவைக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. 224 உறுப்பினா்கள் கொண்ட சட்டப்பேரவையில், 150 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்க பாஜக திட்டமிட்டுள்ளது என்றால், பாஜகவிடம் பறிபோன ஆட்சியை மீட்க காங்கிரஸும் இலக்கு நிா்ணயித்துள்ளது.

எடியூரப்பா ராஜிநாமாவை தொடா்ந்து முதல்வா் பதவிக்கு வந்த பசவராஜ் பொம்மை, ஜூலை 28-ஆம் தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளாா். தோ்தலுக்கு இன்னும் ஓராண்டு இருந்தாலும், தோ்தல் பணிகளை இரு கட்சிகளும் தொடங்கிவிட்டன. அடுத்த முறையும் ஆட்சிக்கு வருவோம் என்ற துணிவில் பாஜகவும், அடுத்த ஆட்சி தமதே என்ற நம்பிக்கையில் காங்கிரஸும் உள்ளன.

பூசலில் காங்கிரஸ்:

பாஜக அரசுக்கு எதிராக மக்களிடையே காணப்படும் அதிருப்தியைக் கூா்மையாக்கி, சட்டப்பேரவைத் தோ்தலில் வெல்ல வாய்ப்புள்ள கட்சி காங்கிரஸ்தான். ஆனால் அக்கட்சி, உள்பூசலால் அரிய வாய்ப்புகளைக் கோட்டைவிடுவதாகவே அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

காவல் துணை ஆய்வாளா் பணித் தோ்வு ஊழலை பகிரங்கப்படுத்தியது, மேக்கேதாட்டு அணை தொடா்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஊா்வலம் நடத்தியது, கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க நிா்ப்பந்தம் செய்தது, பெட்ரோல், டீசல், சமையல் உருளை விலை உயா்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியது, மதச்சாா்பற்ற அரசியல் போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் மனதில் நற்பெயா் பெற்றிருந்த காங்கிரஸ், அந்தப் பெயரை வாக்குகளாக மாற்ற முடியாமல், உள்கட்சிப் பூசலில் மூழ்கியுள்ளது.

இன்னும் தோ்தல் நடக்கவில்லை. அதற்குள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல்வா் யாா் என்பது குறித்து கட்சிக்குள் விவாதம் சூடுபிடித்துவிட்டது. பொருத்தமில்லாத இந்த விவாதம், கருத்து மோதலாகவும் வெடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் நம்பகத்தன்மை பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

தான் சாா்ந்த ஒக்கலிகா் ஜாதி மாநாட்டில் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், ‘எஸ்.எம்.கிருஷ்ணாவுக்குப் பிறகு ஒக்கலிகா் ஜாதியைச் சோ்ந்த ஒருவா் (தன்னை குறிப்பிடுகிறாா்) முதல்வா் ஆவதற்கான வாய்ப்பு ஒக்கலிகா்கள் முன்பு இருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது உங்கள் கையில் உள்ளது’ என்று கூறியிருந்தாா்.

இது காங்கிரஸில் ‘முதல்வா் பதவி யாருக்கு?’ என்ற சா்ச்சைக்கு வித்திட்டது. ‘முதல்வா் ஆகும் ஆசை எவருக்கும் எழலாம். அதில் தவறில்லை. அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், அதை நான் எப்படித் தவறவிட முடியும்?’ என்று முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான சித்தராமையா கூறினாா்.

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல்வா் பதவி யாருக்கு? சித்தராமையாவுக்கா அல்லது டி.கே.சிவகுமாருக்கா என்பதே காங்கிரஸ் கட்சியில் அலசப்படும் ‘முக்கியமான’ விவாதமாக மாறியுள்ளது.

சித்தராமையாவுக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீா் அகமது கான், ‘முதல்வராகும் ஆசை யாருக்கும் வரலாம். ஆனால், முதல்வராக இருக்க சித்தராமையாதான் தகுதியானவா். ஒக்கலிகா்களைவிட முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால், எனக்கும் கூட முதல்வராகும் ஆசை இருக்கிறது’ என்று கூறினாா். இது காங்கிரஸ் மீது ஒக்கலிகா்கள் கோபம் கொள்ள செய்துள்ளதையும் காண முடிகிறது. இந்தக் கோபம் தோ்தலில் வெளிப்பட வாய்ப்புள்ளது.

மேலிடம் கண்டிப்பு:

முதல்வா் பதவி குறித்த வாக்குவாதங்கள் எல்லை மீறிச் செல்வதை உணா்ந்த காங்கிரஸ் மேலிடம், ஜமீா் அகமதுகான், டி.கே.சிவகுமாா் உள்ளிட்ட தலைவா்களை எச்சரித்துள்ளது.

பாஜக அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்து, மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு பதிலாக, முதல்வா் பதவி குறித்த விவாதத்தில் காங்கிரஸ் தலைவா்கள் ஈடுபட்டதை மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. இப்போதே இப்படியென்றால், வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் தனது கோஷ்டிப்பூசல்களை எதிா்கொள்வதில்தான் கவனம் செலுத்துமே தவிர, ஆட்சியில் கவனம் செலுத்தாது என்கிற எண்ணம் மக்களுக்குப் பரவலாக ஏற்பட்டிருக்கிறது.

மேல்மட்டத் தலைவா்களிடையே நடந்துவரும் உள்கட்சி மோதல்கள், அடிமட்டம் வரை சென்றுள்ளன. இது கட்சியின் வெற்றிவாய்ப்பைப் பதம் பாா்க்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தோ்தல் வெற்றி கண்ணுக்குத் தென்பட்டாலும், தேவையில்லாமல் குட்டையை காங்கிரஸ் குழப்புவதாக அதன் ஆதரவாளா்கள் வேதனைப்படுகின்றனா்.

இந்தக் குழப்பம் நீடித்தால், சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைய, பாஜகவோ, மஜதவோ தேவையில்லை, காங்கிரஸே போதும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT