சிறப்புச் செய்திகள்

இணைய மோசடிக்கு வங்கி இழப்பீடு வழங்குமா? நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

DIN

சூரத்: பணத்தை இழந்த வங்கி வாடிக்கையாளர், உரிய நேரத்தில் இணைய மோசடி குறித்து அறிவித்திருந்தால், வங்கி அதற்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர் இணைய மோசடி குறித்து அறிவுறுத்தியதும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தீவிரமான கவனக்குறைவாகும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி நுகர்வோர் தீர்ப்பாயமானது, பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து யுபிஐ பரிவர்த்தனை மூலம் ரூ.39,578 மோசடி செய்யப்பட்டது குறித்த வழக்கை விசாரித்தது. இந்த சம்பவம் நடந்ததும், வங்கி வாடிக்கையாளர் உடனடியாக நேரடியாக வங்கிக்கே சென்று இணைய மோசடி குறித்து வங்கியில் தகவல் அளித்துள்ளார்.

வாடிக்கையாளர் புகார் அளித்ததும், உரிய நேரத்தில் செயல்பட்டு, எந்த வங்கிக் கணக்குகளில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதோ அதனை முடக்கி பணத்தை வங்கி திரும்பப் பெற்றுத் தந்திருக்க வேண்டும் என்பதை தீர்ப்பாயம் வலியுறுத்துகிறது.

இந்த வழக்கில், விதி சுஹாகியா என்ற பெண்ணின் எஸ்பிஐ வங்கிக் கணக்கிலிருந்து ரூ.59,078, சைபர் மோசடி மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவர் வங்கியில் புகார் அளித்துள்ளார். சைபர் குற்ற உதவி எண்ணிலும் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஃபெடரல் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்ட ரூ.19,500ஐ முடக்கி மீண்டும் பெண்ணின் வங்கிக் கணக்குக் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், எஞ்சிய ரூ.39,578 ரூபாயை ஐசிஐசிஐ வங்கிக் கணக்கிலிருந்து மீட்க வங்கி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து வங்கிக்கு வாடிக்கையாளர் நோட்டீஸ் அனுப்பினார். வங்கி எந்த பதிலும் அளிக்கவில்லை. 2022ல்  அவர் நுகர்வோர் தீர்ப்பாயத்தை நாடினார்.

வழக்கு விசாரணையின்போது, பெண்ணின் வழக்குரைஞர் கூறுகையில், ஐசிஐசிஐ வங்கிக் கணக்கை முடக்கி அதிலிருந்து பணத்தை மீட்க எஸ்பிஐ வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் வாடிக்கையாளரின் கவனக்குறைவும் எதுவுமில்லை.

வங்கியோ, வாடிக்கையாளரின் கவனக்குறைவுதான் இதற்குக் காரணம் என்று வாதிட்டது. வங்கிகளின் விதிமுறைகளுக்கு உள்பட்டுத்தான் எஸ்பிஐ நடவடிக்கை எடுத்தது. யுபிஐ அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பண மோசடி நடந்த அன்றே வாடிக்கையாளர் வங்கியில் புகார் அளித்ததற்கு சான்று உள்ளது. ஆனால், அன்றைய தினம் எந்த நடவடிக்கையும் எடுத்ததற்கு வங்கியிடம் எந்த சான்றும் இல்லை என்பதை அடிப்படையாக வைத்து, வாடிக்கையாளர் உரிய அறிவுறுத்தலை கொடுத்தும், வங்கி நடவடிக்கை எடுக்காததால், வாடிக்கையாளருக்கு வங்கிதான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஒரு பண பரிவர்த்தனையில் எந்த வங்கிக் கணக்குக்கு பணம் சென்றது என்ற தகவல் வங்கியிடம் இருக்கும். உடனடியாக அந்தக் கணக்கை முடக்க வங்கிக்கு அறிவுறுத்தி, பணத்தை திரும்பப் பெற முடியும். ஆனால் இதனை செய்ய வங்கித் தவறிவிட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

பணத்தைத் திரும்பப் பெற வங்கி எடுத்த நடவடிக்கைக்கு தொடர்பாக எந்த ஆதாரத்தையும் அளிக்க வங்கியால் முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT