அமைச்சரவைக் கூட்டம் - கோப்புப்படம் 
சிறப்புச் செய்திகள்

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? திட்டமிட்ட புரளியா?

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி தமிழ்நாடு அமைச்சரவையில் பெரிய அளவில் இன்று, ஆக. 22, மாலையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகக் காலையிலிருந்தே பரபரப்பான தகவல்கள் பரவிவருகின்றன.

அமைச்சரவை மாற்றங்கள் பற்றிய அறிவிப்பு மாலையில் வெளியாகலாம் என்றும் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் என்பதாகவும் புதிதாக மூவர்  அமைச்சராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவின.

மேலும், இவற்றுடன் சேர்த்துத் துறை மாற்றங்களும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இந்தத் தகவலுடன், நீண்ட காலமாகத் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ‘துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்’ என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சரியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் தன்னுடைய கட்சிக் கொடியையும் பாடலையும் அறிமுகப்படுத்திய வேளையில்தான் இந்தத் தகவல் வெளியானது.

ஆளுங்கட்சி வட்டாரங்களிலிருந்தே கசிய விடப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தகவலை ஆளுங்கட்சி தொடர்புடையவை மட்டுமின்றிச் சமூக ஊடகங்கள் உள்பட வேறு பல வட்டாரங்களும் மறுபதிப்புச் செய்து பரப்பின.

பின்னர் தானாகவே இதன் பரவும் வேகமும் குறைந்தது. முற்பகலில் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இதுபற்றிக் கேட்டபோது, சிரித்துக்கொண்டே, தனக்குத் தகவல் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக, நேற்று வரை தகவல்கள் ஏதுமில்லை. இன்று சரியாக நடிகர் விஜய் கொடியேற்றும்போது தொடங்கி நண்பகல் வரையிலும் பரபரப்பாகி பின்னர் அடங்கியதைப் போலத் தோன்றுகிறது.

உண்மையிலேயே நம்பத் தகுந்த வட்டாரங்களின் தகவலா? அல்லது திட்டமிட்டுப் பரப்பப்பட்ட புரளியா? எனத் தெரியவில்லை.

எனினும், இன்று மாலையில் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்திக்கப் புதிதாகப் பொறுப்பேற்ற தலைமைச் செயலர் என். முருகானந்தம் நேரம் பெற்றிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின்போது ஏதேனும் அமைச்சரவை மாற்றங்கள் பற்றித் தெரிவிக்கப்படுமா? அல்லது வழக்கமான சந்திப்புதானா? அல்லது துணை முதல்வராகிறார் உதயநிதி, துணை முதல்வராகிறார் உதயநிதி என்பது போல அமைச்சரவை மாற்றம் பற்றியும் இப்படியே பேசிக்கொண்டேதான் இருப்பார்களா எனத் தெரியவில்லை.

எனினும், எது எப்படியிருப்பினும், முதல்வர் மு.க. ஸ்டாலினுடைய அமெரிக்க பயணத்துக்கு முன்னர் துணை முதல்வர் உதயநிதி பற்றிய அறிவிப்பு மட்டும் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT