உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த ஆளுநர் ஆர்.என். ரவி பிடிஐ
சிறப்புச் செய்திகள்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றமா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் வரும் 31- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மாற்றம் பற்றி...

ததாகத்

தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக் காலம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ஆளுநர் பதவியில் அவரே தொடருவாரா? அல்லது மாற்றப்படுவாரா? – என்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமாகியிருக்கிறது.

பிகாரில் பாட்னாவில் பிறந்தவரான ஆர்.என். ரவி, 1976-ல் இந்திய காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். பிறகு மத்திய புலனாய்வுக் குழு, உளவுத் துறை ஆகியவற்றில் பணியாற்றிய இவர், 2012-ல் ஓய்வு பெற்றார்.

2018-ல் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட இவர், பின்னர் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு 2019 ஆகஸ்ட் 1-ல் பொறுப்பேற்றார். கூடுதலாக மேகாலயா ஆளுநர் பொறுப்பையும் சில காலம் கவனித்துக்கொண்டார்.

ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக 2021 செப்டம்பர் 18-ல் ஆர்.என். ரவி பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப் பொறுப்பேற்றிருந்த திமுக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையிலான உறவுகள் சுமுகமான நிலையில் இல்லை எனலாம்.

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய முன்வரைவுகள் பலவற்றுக்கும் ஆளுநர்  ஒப்புதல் வழங்குவதில் கால தாமதமேற்படுகிறது என்று பெரும் சர்ச்சை உருவானது. ஆளுநர் உரை தொடர்பாகவும் ஆளுநருக்கும் ஆளுங்கட்சிக்கும் மோதல் ஏற்பட்டது. தமிழ்நாடா, தமிழகமா என்பது போன்ற விஷயங்கள்கூட சர்ச்சைகளாகின.

இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற முடியாத நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைத்திருக்கிறது. தமிழ்நாடு - புதுவையில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக் கட்சிகளே வெற்றி பெற்றன.

தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளம் போன்ற வேறு சில மாநிலங்களிலும் விரைவில் ஆளுநர்களின் பதவிக் காலம் முடியவுள்ள நிலையில் மாற்றங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பதவி விலகி தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். தற்போது அவர் கவனித்துவந்த தெலங்கானா, புதுவை ஆகியவற்றின் பொறுப்பையும் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்தான் பார்த்துக்கொள்கிறார்.

மீண்டும் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராகும் வாய்ப்பு இருக்கிறதா? மத்தியில் மாறியுள்ள அரசியல் சூழலில், ஆளுநர் மாற்றங்கள், நியமனங்கள் விஷயத்தில் எத்தகைய அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்கும் எனத் தெரியவில்லை.

இதனிடையே, நான்கு நாள் பயணமாகத் தில்லிக்குச் சென்றிருந்த ஆளுநர் ரவி, வியாழக்கிழமை இரவு சென்னைக்குத் திரும்பியுள்ளார்.

தில்லியில் இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியைச் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய ரவி, தொடர்ந்து புதன்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த ஆளுநர் ஆர்.என். ரவி

மத்தியில் புதிதாக அரசு பொறுப்பேற்ற நிலையில் இது வழக்கமான பயணம் எனக் கூறப்பட்டாலும் ரவியின் பதவிக் காலம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவதால் அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? தமிழ்நாட்டிலேயே தொடருவாரா? அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுவாரா? - தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாகியிருக்கிறது ஆளுநரின் பதவிக்காலம்.

இதனிடையே, தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 சட்ட முன்வரைவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் காரைக்குடி, திருவண்ணாலை, புதுக்கோட்டை, நாமக்கல் ஆகியவற்றை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தும் முன்வரைவும் அடங்கும்.

கடந்த காலத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கூடுதலான கால அவகாசம் எடுத்துக்கொண்ட நிலையில் தற்போது காலந்தாழ்த்தாமல் ஆளுநர் உடனே ஒப்புதல் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த மண்! - மதுரை குறித்து Vijay | TVK

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

SCROLL FOR NEXT