சர்ச்சைக்குரிய வகையில் உரை நிகழ்த்திய ஆன்மிகப் பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவரை சென்னை அரசு பள்ளிகளில் பேச அனுமதித்ததாகக் கூறப்படும் முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் என்பவரைத் தஞ்சையிலுள்ள சரசுவதி மகால் நூலகத்துக்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது தமிழக அரசு (பள்ளிக் கல்வித் துறை).
அரசுத் துறைகளில் ஒருகாலத்தில் ஊழியர்கள் அல்லது அலுவலர்கள் ஏதாவது தவறிழைத்தால், இணக்கமாக இல்லாவிட்டால், தண்ணீரில்லா காட்டுக்கு மாற்றிவிடுவதாகக் கூறுவார்கள். அப்போது ‘தண்ணீரில்லா காடுகளில்’ ஒன்றாக ராமநாதபுரம் மாவட்டமும் இருந்தது (இப்போது ராமநாதபுரத்தில் குழாய்களின்வழி காவிரித் தண்ணீர் வீதிகளில் பெருகியோடிக் கொண்டிருக்கிறது!).
இவ்வாறு தண்டிக்கப்படுபவர்களை / பிடிக்காதவர்களைக் கடத்திவிடும் ‘தண்ணீர் இருக்கும் காடுகளில்’ ஒன்றாகத் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் கருதப்படுகிறது தஞ்சை சரசுவதி மகால் நூலகம் (முன்னர் பொதுப் பணித் துறையில் இவ்வாறுதான் பிடிக்காத / சரிப்பட்டுவராத மூத்த பொறியாளர்களைத் திருச்சியிலுள்ள பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையத்துக்கு மாற்றிவிடுவார்கள் என்று கூறுவார்கள்). இப்படித் தமிழக அரசுத் துறைகள் ஒவ்வொன்றிலுமே ‘தண்ணீரில்லாக் காடுகள்’ ஆங்காங்கே இருக்கின்றன.
தண்டிப்பதற்காகத் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் இடமாற்றமா? ஐந்நூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, மக்களுக்குத் திறந்துவிடப்பட்டு நூறாண்டு கண்ட, தஞ்சையின் பெருமைகளில் ஒன்றாகக் கற்றோரால், ஆய்வாளர்களால் மதிக்கப்படும் சரசுவதி மகால் என்ன ஒரு தண்டனைக் கொட்டடியா?
விசாரிக்கப் போனால்தான் தெரிகிறது, பெரிய கோவிலெனும் ராஜராஜேச்சுரமும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் கோலோச்சும் தஞ்சையில் பாரம்பரியமிக்க சரசுவதி மகால் நூலகத்தின் பரிதாப நிலை!
பதினாறு, பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னர் மராட்டியர் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட இந்த நூலகம் சிறப்புற்றதில் மன்னர் இரண்டாம் சரபோஜிக்கும் பெரும் பங்கிருக்கிறது. நூலகத்தில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுமார் 3 லட்சம் மோடி ஆவணங்கள் இருக்கின்றன. அறிவுக் களஞ்சியமான இந்த மோடி ஆவணங்கள் … இன்னமும் முழுமையாகப் பதிப்பிக்கப்படக்கூட இல்லை. மன்னர்கள் கட்டுப்பாட்டிலிருந்த இந்த நூலகம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1918, அக். 5-ல் மக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்பட வேண்டிய இந்த நூலகத்திற்குப் பொறுப்பான முழு நேர இயக்குநர் பதவியோ கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் காலியாகவே கிடக்கிறது. அவருக்கு இருக்கிற எத்தனையோ பணிச் சுமைகளுக்கு நடுவே ‘அலங்காரப் பதவிகளில்’ ஒன்றாக இந்த நூலகத்தின் இயக்குநர் பணியையும் மாவட்ட ஆட்சியர்தான் கூடுதலாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
நூலகத்திலேயே இருந்து கவனிக்கிற நிர்வாக அலுவலர் பணியிடமும் பெரும்பாலும் காலியாகக் கிடக்கும். ஆட்சியரின் நேர்முக உதவியாளர்களில் ஒருவர் கூடுதல் பணியாக இதையும் பார்த்துவந்த நிலையில், ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், வருவாய்த் துறைப் பொறுப்பில் சார் ஆட்சியர் தகுதிநிலையில் இருந்துவந்த இந்தப் பணியிடம் முதன்மைக் கல்வி அலுவலர் தகுதிநிலையில் பள்ளிக் கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் இந்த நூலகத்தில் இதுவரை 600-க்கும் அதிகமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 7,700-க்கும் அதிகமான தலைப்புகளில் தமிழ்ச் சுவடிகள் இருந்தாலும், வெறும் 300 மட்டுமே நூல் வடிவம் பெற்றுள்ளன. அரிய தகவல்களும் அற்புதமான மருத்துவக் குறிப்புகளும் இன்னமும் அச்சேறுவதற்காக வரிசையில் காத்திருக்கின்றன.
இத்தகைய சூழலில்தான் நூலகத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையும் படிப்படியாகத் தேய்ந்து கொண்டிருக்கிறது. 48 பேர் பணிபுரிந்த நூலகத்தில் தற்போது 12 முழு நேர ஊழியர்களும், 3 தற்காலிக பணியாளர்களும்தான். யாராவது ஓய்வு பெற்றால் முடிந்தது, அந்த இடத்துக்கும் வேறு யாரும் நியமிக்கப்படுவதில்லை.
ஓலைச் சுவடிகளில் உள்ளவற்றைக் குறிப்பிட்ட மொழி கற்ற வல்லுநர்கள் பிரதியெடுத்து நூலாகப் பதிப்பிக்க வேண்டும். இதற்கான பணியிடங்கள் எல்லாமும்கூட காலியாகத்தான் இருக்கின்றன. சுமார் 250 நூல்களால் மறுபதிப்புகூட காண முடியவில்லை.
ஏனெனில், நூலகத்தில் ஆள் பற்றாக்குறையுடன் நிதிப் பற்றாக்குறையும் சேர்ந்தே இருப்பதுதான்.
ஆண்டுக்கு ரூ. 40 லட்சமாக இருந்த நூலகத்துக்கான அரசு நிதியுதவி, 10 ஆண்டுகளுக்கு முன் ரூ. 75 லட்சமாக உயர்த்தப்பட்டு, கடந்த ஆண்டு ரூ. 1.10 கோடியாக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து பலரும் ஓய்வுபெறும் நிலையில், ஊழியர்களின் ஊதியங்களுடன், ஓய்வூதியங்களும் சேர்ந்து செலவே பெரும் சவாலாக மாறிவிட்டிருக்கின்றன.
நூலகத்தின் நிர்வாக அலுவலராக முதன்மைக் கல்வி அலுவலர் தகுதி நிலையில் நியமிக்கப்பட்டாலும் (அல்லது தண்டனையாக அனுப்பி வைக்கப்பட்டாலும்?) நிதியும் இல்லாமல் அதிகாரமும் இல்லாமல் அவராலும் எதையும் செய்ய முடிவதில்லை. சூழ்நிலையைப் பார்த்ததும் உள்ளதை வைத்து ஓட்டிக்கொண்டு சென்றாலே போதும் என்ற நிலையில்தான் பொறுப்பேற்பவர்களும் இருக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில்தான் வாராது வந்த மாமணி போல 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் நாள் தஞ்சை சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், சரசுவதி மகால் நூலகத்தைப் பார்வையிட வந்தார். நூலகத்தின் பெருமைகளை வியந்த அவர், தேவையான உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்தார். தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும்கூட சில முறை சென்று வந்திருக்கிறார். முதல்வர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்களின் பார்வையில் பட்ட பிறகு விரைவில் புதிய விடியல் பிறந்துவிடும் என்றே தஞ்சை மக்களும் நூலக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் எதிர்பார்த்தனர்.
ஆனாலும் இத்தனை பெரிய கல்விக் கருவூலத்தை மேம்படுத்த, இதன் அருமை பெருமைகளை உணர்ந்து போற்றிப் பாதுகாக்க, இங்கிருக்கிற அறிவுச் சுரங்கத்தைப் புத்தகங்களாக்கித் தமிழ் மக்களுக்குத் திறந்துவிட இதுவரையிலும் சொல்லிக்கொள்கிற மாதிரி எதுவும் நடைபெறவில்லை.
ஆனால், இத்தனை இடியாப்பச் சிக்கல்களுக்கும் நடுவிலே மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்படக் காரணமான - சென்னையில் மகளிர் பள்ளிகளில் உரைகள் நிகழ்த்த சர்ச்சைக்குரிய பேச்சாளரை அனுமதித்ததாகக் கூறப்படும் முதன்மைக் கல்வி அலுவலரைத் தற்போது தண்டனையாகவோ பரிசாகவோ இங்கே இடம் மாற்றியிருக்கிறார்கள்.
இந்தத் தருணத்தைக் கருத்தில்கொண்டேனும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்துக்குப் புதிய விடியல் பிறக்கும் என்றால் நல்லதுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.