சென்னை மக்கள் தட்டுப்பாடு இல்லாமல் இப்போது தண்ணீர் அருந்துகிறார்கள் என்றால் அதில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருள்கொடையும் இணைந்திருக்கிறது!
ஒரு காலத்தில் சென்னையில் நிலவிய குடிநீர்ப் பஞ்சத்தின் வீச்சை இன்றைய தலைமுறையினரால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது (அந்தக் கொடுமையைத் தண்ணீர் நாவலில் மிகச் சிறப்பாக விவரித்திருப்பார் அசோகமித்திரன்). 1965-ல் நாடாளுமன்றத்தில் சென்னைத் தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க, ஆந்திரத்திலிருந்து கிருஷ்ணா நதி நீரைக் கொண்டுவரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 1968-ல் உடன்பாடு எட்டப்பட்டுப் பணிகள் நடந்தபோதும் தடைப்பட்டுவிட்டது.
1983-ல் சென்னைக்குக் குடிநீர் கொண்டுவர தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆரும் ஆந்திர முதல்வர் என்.டி. ராமா ராவும் இணைந்து தெலுங்கு கங்கை திட்டத்தைத் தொடக்கினர். ஸ்ரீசைலம் அணையிலிருந்து சோமசீலா அணை, கண்டலேறு நீர்த்தேக்கம் வழி பூண்டி நீர்த்தேக்கம் வரை கால்வாயும் அமைக்கப்பட்டது. கால்வாயின் தரமின்மை காரணமாக பெரும் தண்ணீர் இழப்பு நேரிட்டது. தவித்துக் கொண்டிருந்தது சென்னை.
இத்தகைய சூழ்நிலையில்தான், 2002, ஜன. 19 ஆம் தேதி பெங்களூர் வொயிட் பீல்டிலுள்ள ஸ்ரீ சத்ய சாயி பன்னோக்கு மருத்துவமனையின் முதலாம் ஆண்டு விழாவில் பேசும்போது, குடிநீருக்காக சென்னைக்கு உதவப் போவதாக அறிவித்தார் ஸ்ரீ சத்ய சாயி பாபா.
“நாட்டில் பல இடங்களில் குடிநீர்ப் பஞ்சம் இருக்கிறது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இதுபோன்ற குடிநீர்ப் பஞ்சம் இருந்தது. இதையடுத்து, ரூ. 290 கோடியில் அங்கு குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றினோம்.
“இதேபோல, சென்னையிலும் குடிநீர்ப் பஞ்சம் உள்ளது. வசதி படைத்தவர்கள் அதிக செலவு செய்து பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், ஏழை மக்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்காக சென்னைக்குக் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளேன்.
“என்ன கஷ்டம் நேர்ந்தாலும் சரி, எவ்வளவு பணம் செலவானாலும் சரி, சென்னையில் குடிநீர்த் திட்டம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார் ஸ்ரீ சத்ய சாயி பாபா.
இதன் அடிப்படையில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரையிலான சுமார் 150 கி.மீ. தொலைவு கால்வாயைச் சீரமைத்துத் தருவதாகத் தெரிவித்ததுடன், உடனடியாக ஸ்ரீ சத்ய சாயி அறக்கட்டளை மூலம் ரூ. 200 கோடி நிதியும் வழங்கினார் (23 ஆண்டுகளுக்கு முன் ரூ. 200 கோடி!).
இதன் மூலம் கண்டலேறில் தொடங்கி தமிழ்நாடு எல்லை வரையிலான கிருஷ்ணா நதி நீர்த் திட்டக் கால்வாய் முழுவதையும் கான்கிரீட் பூச்சு கொண்டதாக மாற்றும் பணிக்கு ஸ்ரீ சத்ய சாயி அறக்கட்டளை உதவியது.
திட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள் சிமெண்ட் பூச்சுகளுடன் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, (இன்றைக்கு 21 ஆண்டுகளுக்கு முன்) 2004, நவ. 23 ஆம் தேதி, ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 79-வது பிறந்த நாளில், கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து சென்னைக்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நவ. 27 மாலை 6 மணிக்குத் தமிழக எல்லையைத் தண்ணீர் தொட்டுப் பின்னர் பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது. கண்டலேறு – பூண்டி கால்வாய்ப் பகுதிக்கு சத்ய சாயி கங்கா என்றும் பெயர் சூட்டப்பட்டது.
சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் பெறக் கொடையளித்த ஸ்ரீ சத்ய சாயி பாபாவைப் பாராட்டி சென்னையில் 2007, ஜன. 21 ஆம் தேதி, சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் பெரும் விழா நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மகாராஷ்டிர ஆளுநர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் ஆசியுரையாற்றிய ஸ்ரீ சத்ய சாயி பாபா, அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் அன்புடனும் இணக்கமாகவும் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டு, எல்லாரும் இந்தியர்களே; மத வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்றும் அறிவுரைத்தார்.
விழாவில் பாராட்டிச் சிறப்புரையாற்றிய முதல்வர் மு. கருணாநிதி, மக்கள் நலப் பணிக்காக அரசியல்வாதியும் ஆன்மிகவாதியும் ஒன்று சேர்வதில் தவறில்லை. காவிரியும் கொள்ளிடமும் ஒன்றாகச் செல்வது எவ்வாறு ஆச்சரியமில்லையோ, அதுபோலவே இதுவும். இந்த அரசு எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு பாபா போன்றவர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்யத் தயாராக இருக்கும்போது, நான் இன்னமும் பல சாதனைகளை மக்களுக்குச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.
இப்போதும் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இணைப்புக் கால்வாய்கள் மூலம் புழலேரி போன்றவற்றின் வழி சென்னை மாநகருக்கு கிருஷ்ணா நீர் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது!
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருள்கொடை!
[நவ. 23 - ஸ்ரீ சத்ய சாயி பாபா நூற்றாண்டு விழா தொடக்கம்]
இதையும் படிக்க | ஸ்ரீ சத்ய சாயி பாபா சொன்ன 5 குட்டிக் கதைகள்!
இதையும் படிக்க | ஸ்ரீ சாயி ஓர் அற்புதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.