சர்வதேச நிலவரங்கள் பல நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வரும் நிலையில், சீனா, கடந்த 10 மாதங்களாக, எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் தங்கம் வாங்கி கஜானாவை நிரப்பி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சீனா 60 ஆயிரம் அவுன்ஸ் தங்கம் வாங்கியிருக்கிறது. இதன் மூலம், அந்நாட்டின் தங்கம் கையிருப்பு 20.97 லட்சம் கிலோவாக (74 மில்லியன் அவுன்ஸ்களாக) உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு 254 பில்லியன் டாலர்கள்.
சீன மக்களும் அதிகம் தங்கம் வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் அரசு ஊக்குவித்து வருகிறது.
கிடைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில், சீனாவில் கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் அரசின் கைவசம் இருந்த தங்கத்தின் மதிப்பு 2100 டன் தங்கம். இதுவே, தொடர்ச்சியாக தங்கம் வாங்கிக் குவித்ததால் 2024ஆம் ஆண்டு பாதியில் 2,664 டன் தங்கமாக அதிகரித்தது.
கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின் அதாவது 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சீன அரசின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் அளவு 74 மில்லியன் அவுன்ஸ்.
எங்கிருந்து கற்ற பாடம்?
உலக நாடுகளில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் ரஷியாவிடமிருந்துதான், இந்தப் பாடத்தை சீனா கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ரஷியா - உக்ரைன் இடையே போர் தொடங்கிய போது, மேற்கத்திய நாடுகள் சில நடவடிக்கைகளை எடுத்தன. அதில் டாலர்களில் வைக்கப்பட்டிருந்த ரஷிய பணத்தில் பாதியை மேற்கத்திய நாடுகள் முடக்கிவிட்டன.
அது ஒரு மிகப்பெரிய உண்மையை வெளிப்படுத்தியது. டாலர்களில் இருக்கும் பணத்தை முடக்க முடியும். ஆனால், தங்கத்தை யாராலும் தொட்டுப்பார்க்க முடியாது. இதுதான் ரஷியாவிடமிருந்து சீனா கற்றுக்கொண்ட பாடமாக இருந்தது.
மற்ற நாடுகள் கற்றிருக்கும். ஆனால், நடைமுறையில் பரீட்சித்துப்பார்க்கவில்லை. அதை சீனா செய்துகொண்டிருக்கிறது.
டாலருக்கு வந்த சோதனை
பல பத்தாண்டு காலமாக மத்திய வங்கிகள், அமெரிக்க கருவூலத்தை மிகவும் நம்பியிருந்தன. டாலர் பாண்டுகளுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது. ஆனால் இன்று, அமெரிக்காவுக்கு எக்கச்சக்க கடன். டாலரும் இன்று பணவீக்கத்தில் அடிபடுகிறது. அந்நாட்டு அரசால் பல நிதி ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
எனவே, டாலருக்கு மாற்று தங்கம்தான். பாதுகாப்பானதும் கூட. ஏன் இந்தியா தங்கம் வாங்குவதில்லையா என்ற கேள்வி எழலாம். வாங்குகின்றன. இந்தியா, துருக்கி, சிங்கப்பூர், போலந்து நாடுகளும் கூட தங்கம் வாங்கி கையிருப்பில் வைக்கின்றன. ஆனால், சீனாவின் கதையே வேறு. மிகக்பெரிய கதை அது.
சீனா இப்படி தங்கம் வாங்கிக் குவிக்க காரணம் என்ன?
டாலர் மீது இருந்த நம்பிக்கை இழப்பு.
டாலர் தனது அந்தஸ்தை மெல்ல இழந்து வருவது.
சீன பணமான யுவானுக்கு பலம் கூட்ட.
எதிர்காலத்தில் சீனா எடுக்கும் அத்துனை சவால்களுக்கும் ஒரு பாதுகாப்பான சுவராக இந்த தங்க கையிருப்பு உதவும்.
உலகளவில் சீனாவின் கையிருப்பு என்றால் அது வெறும் 7 அல்லது 8 சதவிகிதம்தான். ஒட்டுமொத்த உலகில் தங்கம் கையிருப்பி சராசரியோ 15 சதவிகிதம்.
எனவே, சீனா இன்றோ நாளையோ தங்கம் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை. இந்த சராசரியை எட்டும்வரை அது நிற்காது. ஏற்கனவே இந்த இலக்கை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
சீனா தங்கம் வாங்குவது ஒன்றும் புதிதல்ல. 2000 ஆவது ஆண்டில் ஆரம்பித்த வரலாறு. அப்போது 395 டன்னாக இருந்த கையிருப்பு 2200 டன்னாக உயர்த்தப்பட்டது. உண்மையில் சீனா இதனை விட அதிக டன் தங்கம் கையிருப்பில் வைத்திருக்கலாம் என்றும் யாருக்கும் தெரியாமல், கள்ளச் சந்தையில் கூட தங்கம் வாங்கி கையிருப்பில் வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒரு நாடு, இந்த அளவுக்கு சர்வதேச சந்தையிலிருந்து தங்கத்தை வாங்கை கையிருப்பில் வைக்க வைக்க அது தங்கத்தின் விலையில் எதிரொலிக்கிறது. 2025ஆம் ஆண்டு ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3,600 டாலர்களாக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட 38 சதவிகிதம் அதிகம். இன்னும் சீனா வாங்குவதை நிறுத்தாதவரை இந்த விலை உயர்வும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். தொடரும்.
இது வெறும் தங்கம் மட்டுமல்ல. தங்கத்தை வைத்து சீனா ஆபரணங்கள் எதுவும் செய்யப்போவதில்லை. மாறாக, தங்கத்தின் இருப்பு அந்த நாட்டின் பணப் பலம், அதிகாரப் பலத்தைக் கூட்டும்.
டாலரை வீழ்த்துவோம், மாற்று ஏற்படுத்துவோம் என்று ஒரு தரப்பில் குரல் எழுந்து வந்தாலும், சப்தமே இல்லாமல் அதனை நோக்கி காய் நகர்த்தி வருகிறது சீனா என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தியாவின் நிலை?
இந்தியாவின் தங்க கையிருப்பு நிலை இதற்கு எதிர்மாறாக இருக்கிறது. அதாவது, தங்க ஆபரணம் அணிவது இந்திய பாரம்பரியமாக இருக்கிறது. ஆனால், கொள்கையில் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றே கூறப்படுகிறது.
இந்தியா குடும்பங்கள் குறிப்பாக பெண்களிடம் ஒட்டுமொத்தமாக 25,000 டன் தங்கம் கையிருப்பில் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் தங்க நகைகளாக.
எதிர்காலம் தங்கம்தான்?
படிப்படியாக, உலகம், அதிக சக்தி வாய்ந்த டாலரிலிருந்து தங்கம் மீது பார்வையை செலுத்தும். அப்போது உலக நாடுகள் அதிக விலை கொடுத்து தங்கத்தை வாங்கும். ஆனால், அந்த நாடுகள் வாங்குவதைப் போல பல மடங்கு எடையுள்ள தங்கம் சீனாவில் கையிருப்பில் இருக்கும். அது அசைக்க முடியாத நாடாக சீனா மாறுவதற்கு வழி வகுக்கும்.
சீனா வகுத்து வருவது மிகப்பெரிய கொள்கை திட்டம். வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், பரஸ்பர வரி, பணவீக்கம் போன்றவைதான் இந்த கொள்கை திட்டத்துக்கான வழிகாட்டியாக மாறியிருக்கிறது. ஒரு நிலைப்பாடு மட்டும் தெளிவாகிறது. அதுதான் உலகின் எதிர்காலம் தங்கம்தான். இது சீனர்களுக்குப் புரிந்திருக்கிறது.
இதையும் படிக்க... பெரும் பணக்காரராக எளிமையான பத்து விஷயங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.