பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளையொட்டி துபையின் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கோபுரக் கட்டடத்தில் புதன்கிழமை இரவு மோடிக்கான பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒளிர்ந்தது, கூடவே இப்போது யாருடைய செலவில் என்ற சர்ச்சை ஒலித்துக் கொண்டிருக்கிறது.
உலகின் மிக உயரமான இந்தக் கட்டடத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களுடன் வாழ்த்துச் செய்தி ஒளிர்ந்தது. ஏஎன்ஐ வெளியிட்ட காட்சிப் பதிவில் ஏறத்தாழ 40 வினாடிகள் ஒளிரும் இந்த வாழ்த்துச் செய்தி மீண்டும் மீண்டும் ஒளிர்கிறது.
மோடி படத்துடன் நாட்டின் தேசியக் கொடியிலுள்ள மூவர்ணங்களுடன் - ஹேப்பி பர்த் டே, Service is the Resolve - சேவையே இலக்கு, India first the inspiration – இந்தியா முதலில் (என்ற) உத்வேகம், 75 ஆண்டுகள், ஹேப்பி பர்த் டே என்ற வரிகள் ஒளிர்ந்தன.
இதுபற்றிய செய்தியை வெளியிட்ட ஏஎன்ஐ செய்தி நிறுவனம், இந்தக் கொண்டாட்டம், இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலான உறவுகள் வளர்ந்துவருவதைச் சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து, காலையில் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில், ஐக்கிய அரபு நாடுகளின் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான், எக்ஸ் பதிவில் வெளியிட்டிருந்த பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியையும் குறிப்பிட்டிருந்தது.
இதனால், ஒருவேளை ஐக்கிய அரபு நாடுகளின் அரசு ஏற்பாட்டில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்காக வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக புர்ஜ் கலீஃபாவில் வாழ்த்துச் செய்தி ஒளிரச் செய்திருக்கலாமோ என்று தோன்றியது.
ஆனால், புர்ஜ் கலீஃபாவில் எத்தகைய செய்தியை, யார் ஒளிரச் செய்ய வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தியாக வேண்டும் எனக் கூறப்படுகிறது. எனவே, கட்டணமின்றி ஒளிபரப்பியிருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு.
என்றால், எவ்வளவு கட்டணம்?
புர்ஜ் கலீபாவில் வார நாள்களில் மாலை வேளையில் (இரவு 8 முதல் 10 மணி) 3 நிமிஷங்களுக்கு இந்த லேசர் விளம்பரத்தை ஒளிபரப்புவதற்குக் கட்டணம் 2.50 லட்சம் அரபு எமிரேட் திர்ஹாம்கள்! இன்றைய இந்திய மதிப்பில் ரூபாய் 59.84 லட்சம்!
வார இறுதி நாள்கள் என்றாலோ, கூடுதலான நேரம் ஒளிபரப்ப வேண்டும் என்றாலோ அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும். வார இறுதி நாள்களில் (இரவு 8 முதல் 10 மணி) 3 நிமிஷங்களுக்கு 3.50 லட்சம் திர்ஹாம்கள் – ரூ. 83.79 லட்சம்!
இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவு வரையிலான நேரத்தில், 15 நிமிஷங்கள் ஒளிபரப்ப வேண்டுமானால் பத்து லட்சம் திர்ஹாம்கள் – சுமார் 2.39 கோடி ரூபாய்!
ஒளிபரப்பு நேரம், ஒரு நாளில் எந்த நேரத்தில் ஒளிபரப்பப்படுகிறது, விளம்பரம் தொடர்பான விஷயங்கள் போன்றவற்றைப் பொருத்து இந்தக் கட்டணங்கள் வேறுபடும்.
இந்தக் கோபுரக் கட்டடத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்புவதற்கான பணிகளைத் தனியொரு நிறுவனம் கவனித்துக் கொள்கிறது. நான்கு வாரங்களுக்கு முன்னரே விளம்பரங்கள் தரப்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்த இந்த விளம்பரம் எவ்வளவு நேரம் ஒளிர்ந்தது என்பது பற்றித் தெரியவில்லை. குறைந்தபட்சம் 3 நிமிஷங்கள் என்றாலே புதன்கிழமை ஒளிபரப்பியதற்கு ரூ. 60 லட்சம் கட்டணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் (அங்கேயெல்லாம் ஜி.எஸ்.டி. இருக்கிறதா? இருந்தால் அது எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை!). ஒளிபரப்பு நேரம் அதிகமாக இருந்திருந்தால் கட்டணமும் அதிகமாகத்தான் இருக்கும்.
பிரதமரை வாழ்த்தி ஒளிபரப்பான மிகவும் ‘காஸ்ட்லி’யான இந்த வாழ்த்துச் செய்திக்கான செலவை – பணத்தை யார் செலுத்தியது? அரசு பணத்தில் விளம்பரம் செய்யப்பட்டதா? இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்காக ஐக்கிய அரபு நாடுகளின் அரசு செலவு செய்ததா? இல்லாவிட்டால் வேறு யார்? எதற்காக செலவு செய்திருப்பார்கள்? – சமூக ஊடகங்களில் இவ்வாறாக நிறைய கேள்விகள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.