ஜல்லிக்கட்டு காளையும் கயிறுகளும்... 
சிறப்புச் செய்திகள்

களைகட்டும் ஜல்லிக்கட்டு.. பரபரக்கும் மதுரை.. காளைகளின் கயிறு விற்பனை அமோகம்!

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரடைந்துவரும் நிலையில், கயிறு விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருவதைப் பற்றி...

ம. சரோவர் ராஜா

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கயிறு விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதியில் ஒருபுறம் வாடிவாசலை தயார்செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மறுபுறம் உரிமையாளர்கள் காளைகளைப் போட்டிக்கு தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை அலங்கரிப்பதிலும் காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், காளைகளுக்கு கழுத்தில் கட்டக்கூடிய மூக்கு கயிறு, கழுத்துக் கயிறு உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

மூக்காணாங்கயிறு

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காட்டு விலங்குகளாக இருந்த மாடுகளை வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்தி அதனை தனது உழவுத்தொழிலுக்கும் பயன்படுத்திய பாரம்பரியம் கொண்டவர்கள் நம் முன்னோர்கள்.

ஜல்லிக்கட்டுக் காளைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மூக்கணாங்கயிறுகள் இல்லையென்றால் அவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும். ஜல்லிக்கட்டுப் போட்டிக்குச் செல்லும் காளைகளை அடக்க மூக்காணாங்கயிறு மிகவும் அவசியமாகிறது.

வாடிவாசலின் பின்புறம் இருந்து உள்ளே அழைத்து வரப்படும் ஒவ்வொரு காளையும், அதன் மூக்கணாங்கயிறை அறுத்துவிட்ட பிறகுதான் வாடியின் முன்பாக ஒவ்வொரு காளையும் ராக்கெட் போல சீறிப்பாய்கின்றன. அதே வேகத்தில் பாய்ந்து வரும் காளையை மாடுகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல காத்திருக்கும் கலெக்‌ஷன் பாயின்ட்டில் காளைகளின் உரிமையாளர்கள் கயிற்றை லாவகமாக வீசிப் பிடித்து மூக்கணாங்கயிறு கட்டி அழைத்துச் செல்கின்றனர்.

மூக்கணாங்கயிறு இல்லையென்றால் காளையும் இல்லை; மாட்டு உரிமையாளர்களும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஜல்லிக்கட்டு நடைபெறும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்றால் கையில் கயிரோடு தான் மாடுபிடி உரிமையாளர்களும் அவர்களின் உதவியாளர்களும் சுற்றிக் கொண்டிருப்பதை இயல்பாகக் காண முடியும்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்குச் செல்வதற்கு முன்னதாக மாடுகளுக்குத் தேவையான பல வண்ணங்களிலும், பல்வேறு நீளங்களிலும், கனத்திலும் வேலைப்பாடுகளுடன்கூடிய கயிறு வாங்க வேண்டுமானால் நீங்கள் மதுரை கீழமாசி வீதி வந்து தான் ஆக வேண்டும்.

காளைகளின் உரிமையாளர்கள் விரும்பும் வடிவங்களில் இங்கு கிடைக்காத கயிறுகளே இல்லை. இங்கு பல கடைகள் பாரம்பரியமாக விற்பனை செய்து வருகின்றன. கீழமாசி வீதி என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தெருவில் தைப்பொங்கலையொட்டி கூடுதல் பரபரப்போடு வியாபாரம் களைகட்டும்.

கடந்த மூன்று தலைமுறைகளுக்குமேல் மாடுகளுக்குக் கயிறுகள் விற்பனை செய்துவரும் பாஷா பாய் கடை என்று சொன்னால் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

இதுகுறித்து ஏ.எஸ்.ஏ. டிரேடர்ஸ் என்ற பெயரால் அறியப்படும் இதன் உரிமையாளர் பாஷா கூறுகையில், “என்னுடைய தாத்தா காலத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக தற்போது வரை மாடுகளுக்கான கயிறு விற்பனையை செய்து வருகின்றோம்.

ஜல்லிக்கட்டுக் காளைகளுக்குத் தேவையான அனைத்து கயிறு வகைகளும் இங்கு விற்பனைக்கு உள்ளன. வாடிவாசல், மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு என மூன்று வகையான மாடுபிடி விளையாட்டுகளில் பயன்படுத்தக்கூடிய கயிறு வகைகளை நாங்களே நேரடிப் பார்வையில் உற்பத்தி செய்து வாடிக்கையாளரின் தேவைக்கேற்றார் போல் விற்பனை செய்து வருகிறோம்.

இந்தக் கயிறுகள் அனைத்தும் மதுரையில் மட்டும்தான் தனித்துவத்தோடு கிடைக்கும். சுமார் 200 கி.மீ. சுற்றளவில் இங்கு வந்துதான் மக்கள் அனைவரும் தங்கள் கால்நடைகளுக்கு தேவையானவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

இதற்காகவே ஜல்லிக்கட்டுக்கு மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே கயிறு உற்பத்தியை தொடங்கி விடுவோம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குத் தேவையான கயிறுகள் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன. மதுரை கீழமாசி வீதியில் மட்டும் சுமார் 10 கடைகள் இருக்கின்றன. பசு மாடுகளுக்கு ரூ.150-க்கு கயிறுகள் விற்பனை செய்யப்பட்டாலும், ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு ரூ.1,500 மதிப்பிலும் அதற்கு மேலாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் சீசனில் மட்டும் இந்த கடைகள் தோராயமாக ரூ.10 லட்சத்துக்கு கயிறுகளை விற்பனை செய்கின்றன” என்கிறார் பாஷா.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஶ்ரீனிவாசன் கூறுகையில், “பாரம்பரியமாகவே நாங்கள் இந்த பாய் கடையில் தான் மாடுகளுக்கு தேவையான கயிறு வகைகளை வாங்குகிறோம். எங்களது கிராமம் மட்டுமன்றி அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் மதுரை கீழமாசி வீதியில் தான் கயிறுகளை வாங்கிச் செல்வது இப்போதும் வழக்கமாக இருக்கிறது.

இந்தக் கடையில் வாங்கும் கயிறுகள் மிகத் தரமாக இருக்கும். பயன்பாட்டைப் பொறுத்து ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை கயிறுகள் நீடித்து உழைக்கும். தற்போது பொங்கல் வருவதால் மாட்டுப் பொங்கலுக்கு புதுக்கயிறு வாங்கி மாடுகளுக்கு கட்டுகின்ற வழக்கம் உண்டு. ஆகையால் நேரடியாக வந்து கயிறுகளை வாங்கி செல்கிறோம். இங்கு விலையும் குறைவாக இருக்கிறது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காகவே எங்களது வாழ்க்கையை தியாகம் செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது எங்கள் மாடுகளை அடிமாடுகளுக்கு விற்றோம். தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி உள்ளதால் புதிதாக மாடுகள் வாங்கி போட்டிக்கு தயார் செய்து வருகிறேன். அதற்காக கயிறு வாங்க இங்கு வந்தேன்” என்றார்.

ஜனவரி மாதம் பிறந்ததும் ஜல்லிக்கட்டுக்கான சீசனும் துவங்கி விடுகிறது. இதனால், கடை முழுவதும் பணியாளர்கள் விறுவிறுப்போடு தங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆங்காங்கே கிராமப்புறங்களில் கடை வைத்துள்ள சிறு சிறு வியாபாரிகளும் இங்குள்ள கடைகளுக்கு நேரடியாக வந்து கயிறுகளை கொள்முதல் செய்து கொண்டு போவதும் உண்டு. நூல் கயிறு, நைலான் கயிறு என வாங்குபவர்களின் வசதிக்கேற்றவாறு இங்கே பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொர்பாக சென்ட்ரல் கயிறு மார்ட் கடையின் உரிமையாளர் வேல்முருகன் கூறுகையில், “கயிறு மட்டுமின்றி மாடுகளுக்கு அணிவிக்கப்படும் மணிகள், செயின் ஆகியவை இங்கே விற்பனை செய்யப்படுகின்றன. நான்கு தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம்.

மதுரை மட்டுமன்றி வெளி மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் கூட ஏற்றுமதி செய்கிறோம். பொதுவாக இந்த நேரத்தில்தான் மாடுகளுக்கு கட்டப்பட்டிருந்த பழைய கயிறுகளை மாற்றி புதிய கயிறுகளை வாங்கி செல்வது வழக்கம்.

அவரவர் மாடுகளுக்கு தேவையான கயிறு வகைகளை நேரடியாக பார்த்து வாங்கி செல்கிறார்கள். குறைந்தபட்சம் ரூ.20-லிருந்து அதிகபட்சமாக ரூ.2000 வரை விலையுள்ள கயிறுகள் இங்கு விற்பனைக்கு உள்ளன. சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவைப் பொறுத்து வேலைப்பாட்டை பொறுத்து இன்னும் சற்று விலை கூடுதலாகவும் ஆகலாம். இதே போன்ற கயிறுகள் பிற பகுதிகளிலும் கிடைக்கும் ஆனால் இங்குள்ள தரம் இருக்காது” என்றார்.

Tamil Nadu Prepares for Jallikattu Amid Pongal Festivities; Bulls and Tamers Get Special Training

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

“நம் DATA நம் கையில்!” சர்வம் AI உடனான ஒப்பந்தத்தின் பயன்களை விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்! பலி 600-ஐ கடந்தது!

சென்செக்ஸ் 250 புள்ளிகளுடனும், நிஃப்டி 58 புள்ளிகளுடன் சரிந்து நிறைவு!

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும்..! வித் லவ் படத்தின் புதிய பாடல்!

SCROLL FOR NEXT