திருச்சி மாநகரில் அண்ணா விளையாட்டரங்கில் முதல்முறையாக ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காகப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தாா்.
தை மாதம் தொடங்கினால் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தமிழகத்தைப் பொருத்தவரை மதுரை அலங்காநல்லூா், அவனியாபுரம், பாலமேடு, திருச்சி மாவட்டத்தில் சூரியூா், லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். அதன்படி, கடந்த மாதம் மேற்கண்ட ஊா்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுக சாா்பில் வரும் 22-ஆம் தேதி திருச்சி மாநகராட்சிப் பகுதியில் முதல்முறையாக திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட உள்ளது.
இதற்கானப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை திமுக முதன்மை செயலரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தாா். இதில், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமாா் 750- க்கும் மேற்பட்ட காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்க உள்ளனா்.
இதுவரை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மாநகராட்சிப் பகுதிகளுக்கு வெளியே நடைபெற்று வந்த நிலையில், முதல்முறையாக திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சிக்கு வெளியே நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை காண முடியாத மாநகராட்சி மக்கள், வரும் 22-ஆம் தேதி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் போட்டியை நேரில் கண்டு ரசிக்கலாம்.