அஜீத் பவார், மகாராஷ்டிர மாநிலத்தின் நீண்ட கால துணை முதல்வராக இருந்தவர், இன்று விமான விபத்தில் பலியானார். அவரது நீண்ட கால அரசியல் வாழ்வு, அரசியல் நுணுக்கம், அனுபவம் ஆகியவற்றுடன் முதல்வர் பதவிக்கான கனவு நிறைவேறாமலேயே முடிந்து போனது.
எனினும், மக்களிடையே, மகுடம் சூடாத மன்னராகவே அஜித் பவார் விளங்கி வந்தார்.
இன்று காலையிலேயே மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலியானதாக அதிர்ச்சிதரும் செய்திகள் வெளியாகின. மாநில அரசியலில் கோலோச்சி வந்தவரும், நீண்ட காலம் துணை முதல்வராக பதவி வகித்தவரும் என மகாராஷ்டிர வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் 66 வயது அரசியல்வாதி, தான் பயணித்த விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது நேரிட்ட விபத்தில் பலியானார்.
அஜீத் அனந்தராவ் பவார், 1959ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி அகமதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர். கிராமப் பகுதிக்கே உரிய பல்வேறு இடர்பாடுகளுடன் இளமைப் பருவத்தை அடைந்தவர், பல்வேறு இயக்கங்களில் இணைந்தார். 1982ஆம் ஆண்டு சர்க்கரை ஆலைக் கழகங்களின் தேர்தலில் வெற்றி பெற்றவர், பிறகு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்குத் தலைமையேற்றிருந்தார்.
மெல்ல அரசியலுக்குள் நுழைந்தவர், 1991ஆம் ஆண்டு பாராமதி பேரவைத் தொகுதியின் வெற்றி மூலம் பேரவைக்குள் நுழைந்தார். மக்களவை உறுப்பினராகவும் இருந்த அஜீத் பவார், தன்னுடைய பலம் அறிந்து மீண்டும் மாநில அரசியலுக்கு நுழைந்தார்.
பல்வேறு நிர்வாகத் திறமைகளை வளர்த்துக் கொண்ட அஜீத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரானார். மகாராஷ்டிர பொருளாதாரத்தையும், கொள்கைகளையும் வடிவமைக்கும் தலைவர்களில் ஒருவராகவும் மாறினார். மகாராஷ்டிர அரசில் நிதித்துறை, நீர் மேலாண்மை, எரிசக்தி, ஊரக மேம்பாடு என பல அமைச்சகங்களை நிர்வகித்தார். பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டணியில், அஜீத் பவார் 6 முறை துணை முதல்வராக பதவி வகித்துள்ளார்.
துணை முதல்வர் என்ற பதவியை அடைந்துவிட்ட அஜீத் பவாருக்கு முதல்வர் பதவிதான் ஒரே லட்சியமாக இருந்தது. மகாராஷ்டிர முதல்வர் என்ற கனவை நோக்கியோ அவர் தன்னை செலுத்திக் கொண்டிருந்தார். பல்வேறு தருணங்களில், அவருக்கு அந்த நல்வாய்ப்புக் கிட்ட நெருங்கி வந்தபோதும், அவரது அரசியல் எதிரிகள் மற்றும் அவருக்கு எதிராக தீட்டப்பட்ட சில சதிகள் காரணமாக, முதல்வர் நாற்காலி கைநழுவிக்கொண்டே இருந்தது.
எப்போதும் மக்களின் ஆதரவு பெற்ற முக்கிய தலைவராக இருந்த அஜீத் பவார், ஒருநாளும் முதல்வராகவில்லை.
அவர் இன்று உலகை விட்டு மறைந்திருந்தாலும், அவரது வாழ்நாளில் கடைசி வாரங்கள் கூட, அரசுப் பணிகள் மற்றும் தேர்தல் வேலை என சுழன்றுகொண்டிருந்தார். அவர் துரதிருஷ்டவசமான அந்த விமானத்தில் ஏறுவதற்கு முன்புகூட, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் லாலா லஜ்பத் ராய்க்கு மரியாதை செலுத்துவதாக பதிவிட்டிருந்தார்.
விமானம் தரையிறங்க முடியாமல் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் பறிக்கப்பட்டது உயிர் மட்டுமல்ல, மகாராஷ்டிர அரசியல் வரலாற்றில் இடம்பெற்றிருந்த ஒரு அரசியல்வாதியின் முதல்வர் ஆகும் கனவையும்தான்.
அவரது இழப்பு ஒட்டுமொத்த மகாராஷ்டிர மக்களுக்குமான இழப்பாக மாறியிருக்கிறது. கட்சி பேதமின்றி அனைவரும் துக்கம் அனுசரித்து வருகிறார்கள். அவரது கனவு, மகாராஷ்டிர மாநிலத்தின் மிக முக்கிய அலுவலக நாற்காலியில் அமர்வது என்பதே, அவரது இழப்பு, வெறும் மகாராஷ்டிர அரசுக்கு மட்டும் வெற்றிடம் அல்ல, அவர் செலுத்தி வந்த அரசியல் பாதையிலும் ஏற்பட்டிருக்கும் வெற்றிடமாகவே இருக்கும். அதனை நிரப்ப யாராலும் இயலாது என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
அஜீத் பவாருக்கு சுனேத்ரா பவார் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.