வண்டலூர் மிருகக் காட்சி சாலை, கிண்டி தேசியப் பூங்காவில் வர்தா புயல் காரணமாக 150 க்கும் மேற்பட்ட மரங்கள் சேதமடைந்துள்ளன என சம்மந்தப் பட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு இடங்களிலும் மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு இதுவரை உயிர் சேதம் எதுவுமில்லை எனவும் சேதமடைந்த மரங்களின் எண்ணிக்கை குறித்து மேலும் கணக்கிட்டுக் கொண்டிருப்பதாகவும் சென்னை ‘வைல்டு லைஃப் வார்டன் கே.கீதாஞ்சலி’ தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதலே வண்டலூர் மற்றும் கிண்டி உயிரியல் பூங்காக்களில் முகாமிட்டுள்ள அதிகாரிகள் குழுவானது நாளைக்குள் அங்கு நிகழ்ந்திருக்கும் சேத அளவை முழுதுமாக கணக்கிட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் புயலை முன்னிட்டு மரங்களை விட மிருகங்களை உயிருடன் பாதுகாப்பதையே தங்களுடைய முதன்மை லட்சியமாகக் கொண்டு தாங்கள் செயல்பட்டதாகவும், இத்தகைய கடுமையான இயற்கைச் சீற்றத்தின் பின் மிருகங்களில் உயிர்பலி எதுவும் நிகழாமல் காப்பாற்ற முடிந்தது தங்களுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.
பொருட் சேதம் என்ற அளவில் பார்த்தால் வண்டலூர் உயிரியல் பூங்காவின் காம்பவுண்டு சுவர் பாதிக்கும் மேல் சிதிலமடைந்துள்ளது. இதே போன்ற சேதங்கள் பூங்காவின் உள்ளிருக்கும் கட்டடப் பகுதிகளிலும் இருக்கலாம் எனவும், அனைத்து சேதங்களையும் கணக்கிட்டு நாளைக்குள் சீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப் பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்தார். பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கும், உள்ளிருக்கும் மிருகங்களுக்கும் இடைஞ்சல் ஏற்படா வண்ணம் மரங்களின் முறிந்த கிளைகளை அப்புறப் படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.