தற்போதைய செய்திகள்

ஆம்புலன்ஸ் சேவை ஏன் இவர்களுக்கு மறுக்கப்பட்டது?

DIN

புவனேஸ்வர் : பலாசூரில் நடந்த சம்பவம் இது. அமரர் ஊர்தியில், இறந்தவர் சடலத்தை கொண்டு செல்கையில் ஓட்டுனர் நோயாளியின் உதவிக்கு வந்தவரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தரவில்லை என்ற காரணத்தால் சடலத்தை தெருவில் கிடத்துவிட்டார். இது குறித்து உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பிரதாப் ஜெனா வியாழக்கிழமை அன்று கலெக்டர் ப்ரோமத் குமார் தாஸிடம் இதனை விசாரித்து அதற்குரிய ஆவணங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டுள்ளார்.

சிந்தமணிபாத எனும் கிராமத்தைச் சேர்ந்த ஏழை முதியவர் ரஹ்மான் கான். உடல்நலக் குறைவால் புதன்கிழமை பாதிக்கப்பட்டார். பக்கத்து வீட்டாரான துனி பெஹ்ரா எனும் பெண்மணி அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரஹ்மான் கான் வியாழனன்று அதிகாலையில் இயற்கை எய்தினார்.

உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், சடலத்தை கிராமத்துக்கு எடுத்துச் செல்ல ஒரு தனியார் அமரர் ஊர்தியொன்றின் உதவியை நாடியுள்ளார் துனி பெஹ்ரா. சடலத்தை ஏற்றிக் கொண்ட ஓட்டுனர் பெஹ்ராவிடம் பணம் கேட்டுள்ளார். துனி பெஹ்ரா தன்னிடம் பணம் இல்லை சடலத்தை கிராமத்துக்கு எடுத்துச் செல்ல உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஓட்டுனர் மனிதாபிமானம் துளியும் இன்றி சடலத்தை தெருவில் அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதன் பின் கிராமத்தினர் இவ்விஷயத்தை கேள்விப்பட்டு சடலத்தை அருகிலுள்ள மயானத்தில் புதைத்தனர்.

இதே போன்று இன்னொரு மனித நேயமற்ற சம்பவம், சினாபலி எனும் இடத்திலும் நடந்துள்ளது. 102 அமரர் ஊர்தி ஓட்டுனர் கர்ப்பிணி பெண் ஒருவரின் கணவரிடம் 500 ரூபாய் லஞ்சப் பணம் கேட்டுள்ளார். இன்னொரு சம்பவத்தில் வார்ட்டில் லஞ்சம் கேட்டு அதைத் தர மறுத்ததால் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வராந்தாவில் பிரசவம் நடந்தது. லஞ்சம் என்பது எப்படி அடிமட்டத்திலிருந்து புரையோடி உள்ளது என்பதற்கு மேற்சொன்ன மூன்று சம்பவங்களும் சிறு சான்று. அரசாங்கம் இவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளது.

ட்ராலியில் மனைவியைத் தள்ளிச் சென்ற நபர்

தினக்கூலி செய்து பிழைத்து வரும் ஒருவர் தனது மனைவியை மஹாகாலாபடாவில் உள்ள கம்யூனிட்டி ஹெல்த் செண்டரில் அனுமதிக்க 108 எண்ணில் ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆனால் வாகனம் வராததால் ட்ராலியில் மனைவியை வைத்து அவசரமாக தானே அழைத்துச் சென்றுள்ளார். இச்சம்பாம் அப்பகுதியில் கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கியாரபங்கா கிராமத்தைச் சேர்ந்த அகல்யா தாஸ் கடந்த சில நாட்களாகவே கடுமையான காய்ச்சலில் அவதியுற்று வந்தார். அவரின் நிலமை மோசமடையவே, அகல்யாவின் கணவர் குருசரானா கிராமத்தினரின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து வாகனத்தை உடனடியாக அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆனால் காத்திருந்தது தான் மிச்சம் ஆம்புலன்ஸ் வரவேயில்லை. வேறு வழியின்றி ஒரு ட்ராலியில் தன் மனைவியை ஏற்றி அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரித்த போது தங்களுக்கு குருசராணாவிடமிருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை என்று மறுத்துவிட்டனர்.

மனிதாபிமானம் அருகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற சம்பவங்களை தினம்தோறும் படித்துக் கொண்டும் கேள்விப்பட்டுக் கொண்டும் தான் இருக்கிறோம். புவனேஸ்வரில் மட்டுமல்ல தமிழகத்தில் கூட இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன தீர்வு? சாமானியர்கள் வாழத் தகுதியில்லாத நிலம் ஆகிப் போனதா இந்தப் புனிதமான நாடு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT