கரோனா இல்லா மாநிலம் கோவா: முதல்வர் அறிவிப்பு
கோவா மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்கள் யாருமில்லை என்று மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
பனாஜி: கோவா மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்கள் யாருமில்லை என்று மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
கோவாவை கரோனா இல்லா மாநிலம் என ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ள அவர், மாநிலத்தில் பரிசோதனை செய்யப்பட்ட ஏழாவது நபருக்கும் நோய்த் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 3 ஆம் தேதி நிலவரப்படி புதிதாக கரோனா நோயாளிகள் யாருமே வரவில்லை. கடைசியாக இருந்த நபருடைய பரிசோதனை முடிவும் இன்று இல்லை என வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் கரோனா தொற்றுள்ளவர்கள் யாருமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
கரோனா இல்லா மாநிலம் என்ற தகுதி நிலை தொடர, மக்கள் தொடர்ந்து, அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சாவந்த் கேட்டுக்கொண்டார்.
கரோனாவால் பாதிக்கப்படாத பகுதி கோவா என மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும், தற்போதைய நிலையை நாங்கள் மத்திய அரசுக்குத் தெரிவித்திருக்கிறோம் என்றும் முதல்வர் பிரமோத் சாவந்த் குறிப்பிட்டார்.