தற்போதைய செய்திகள்

காணாமல்போய்விட்ட பேனா நிப் தொழிற்சாலைகள்: சாத்தூரின் துயரம்

சாத்தூரில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் 300-க்கும் அதிகமான பேனாக்களில் பொருத்தும் நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன, ஆனால், இப்போது இவற்றின் எண்ணிக்கை விரல்கூட விட முடியாத அளவுக்கு குறைந்துவிட்டது

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

சாத்தூரில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் 300-க்கும் அதிகமான பேனாக்களில் பொருத்தும் நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன, ஆனால், இப்போது இவற்றின் எண்ணிக்கை விரல்கூட விட முடியாத அளவுக்கு குறைந்துவிட்டது.

அரசு மானியம் இல்லாததும், 'லெட்', 'பால்பாயின்ட்', ஜெல் பேனாக்களின்  வருகையாலும் சாத்தூரில் செயல்பட்டு வந்த 300-க்கும் மேற்பட்ட பேனா நிப் தொழிற்சாலைகள் இன்று வெறும் மூன்றாக குறைந்துள்ளன.

பேனாவில் தேய்மானம் என்பது அதன் நிப் மட்டுமே என்பதால் நிப்பை மாற்றினால் போதும், பேனாவைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனால் ஒருகாலத்தில் பேனாவைவிட பேனா நிப்களின் தேவை அதிகமாக இருந்தது. எங்கள் கிராமத்தை சேர்ந்த கருப்பையா ஆசாரி மகன்கள் எனது பள்ளி தோழர்கள் சுப்பிரமணி, மாணிக்கம் ஆகிய இருவர் சாத்தூரில் நிப் கம்பெனி நடத்தினர்.

இந்தத் தொழிற்சாலைகளுக்கெல்லாம் என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது, இப்போது என்ன நிலைமை என்று விசாரித்தபோது ஏராளமாகத் தெரிவித்தார்கள் அவர்கள்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் 300க்கு மேற்பட்ட பேனா நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. 2,500க்கும் மேற்பட்டோர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் நிப் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிப்ட் ஆக இரவுபகலாக வேலை பார்த்தனர். ஒருகாலத்தில் வழங்கப்பட்ட மானியம் பின்னர் நிறுத்தப்பட்டு விட்டது.

அனைத்துத் துறை அலுவலர்கள் மை பேனா பயன்படுத்தி வந்தனர். பேனாவில் அதிகம் தேய்மானம் ஆகும் பகுதி அதன் நிப். இதனால், பேனா நிப்களின் தேவை அதிகமாக இருந்தது. அதன் காரணமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மட்டும் 1962 ஆம் ஆண்டில் 250-க்கும் மேற்பட்ட பேனா நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்திருக்கின்றன.

சாத்தூரைச் சுற்றியுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,500 தொழிலாளர்கள் இவற்றில் பணிபுரிந்து வந்துள்ளனர். தென்னிந்திய அளவில் சாத்தூரில் மட்டுமே நிப் தொழிற்சாலைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, ரஷியா முதலான நாடுகளிலிருந்து பேனா நிப் தயாரிப்புத் தொழிலுக்காக மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்கப்பட்டன.

நிப் தொழிலை, சாத்தூரில் 1950-ஆம் ஆண்டுகளில் தொடங்கியுள்ளனர்.  இந்தக் காலகட்டங்களில் இராஜகோபால ஆசாரி என்பவர், தன்னுடன் மேலும் சிலரையும் சேர்த்துக்கொண்டு,பேனா நிப் தயாரிக்கிற தொழிலில் முதன்முதலாக ஈடுபட்டார். இவர் பித்தளையில்தான் முதலில் நிப்புகளைத் தயாரித்துள்ளார். பித்தளையில் நிப் தயாரிப்பதால், உற்பத்திச் செலவுகள் அதிகமானது, இதனால் சேலம் உருக்காலையிலிருந்து கழிவுத் தகடுகளை வாங்கிக்கொண்டு வந்து, அவற்றில் நிப்களைத் தயாரித்தார் அவர்.

இந்தத் தொழிலில் இவர் கண்ட வெற்றியைப் பார்த்து, அழகர்சாமி ஆசாரி என்பவரும் நிப் தயாரிப்புத் தொழிலில் இறங்கினார். இவருடன், இவரது புதல்வரான மனோகரன் ஆசாரியும், சகோதரர் வரதராஜ ஆசாரியும் இணைந்து இத்தொழிலை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து சுத்தியல் மற்றும் வெட்டு இரும்பால் தகடுகளைத் துண்டாக்கி நிப் தயாரித்த நிலையை மாற்றி, இதற்கென்றே கையால் இயக்கக் கூடிய எந்திரத்தையும் உருவாக்கி, அதன் மூலமாக நிப்புகள் உற்பத்தியை அதிகரித்து, ராஜஸ்தானில் உள்ள நிப் வியாபாரி ஒருவருடன் சந்தைப்படுத்தும் தொடர்பை உண்டாக்கிக் கொண்டு தயாரிக்கிற நிப்புகளை அவருக்கு  விற்பனை செய்தனர்.

பின்பு இராஜகோபால ஆசாரி மற்றும் அழகர்சாமி ஆசாரி ஆகியோரிடம்  கூலி முறையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், தனித்தனியாக நிப்  தயாரிக்கிற இயந்திரத்தை வைத்து குடிசைத் தொழில் போல தனித் தனியாகத் தொழிலைத் தொடங்கினர்.

சாத்தூரில் நிப் கம்பெனிகளின் எண்ணிக்கை, சீக்கரமே 20 ஆக உயர்ந்தது. 1975 முதல் 1985 வரையிலான பத்தாண்டு கால இடைவெளியில் மொத்தம் 150 நிப்  கம்பெனிகள் சாத்தூரில் உருவாயின. இந்த 150 கம்பெனிகளில் 2000-க்கும் அதிகமான கூலித் தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். இந்த வேகமான வளர்ச்சிக் காலம்தான் நிப்புத் தொழிலின் பொற்காலம்.

தொழிலாளர்களுக்கும் குறைவின்றிக் காசு புழங்கும் தொழிலாய் இது இருந்தது. நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிஃப்ட் பகல் இரவு என வேலை பார்த்து, தினமும் 500 ரூபாய் வரையில் இரட்டிப்பாகக் பெற்றனர்.

பேபி மாடல், 2 ஆம் நம்பர் நிப், 3 ஆம் நம்பர் நிப், 4 ஆம் நம்பர் நிப், ஐந்தரை நம்பர் நிப், உருண்டை நிப், ஆர்ட் நிப் எனப் பலவிதமான ரகங்கள்.  இத் தொழில் இங்கு தொடங்கப்பட்ட காலகட்டங்களில், 144 எண்ணிக்கை கொண்ட நிப்பு ஒரு ‘குரோஸ்’ என நிர்ணயம் செய்யப்பட, குரோஸ் ஒன்றுக்கு 25 பைசா எனவும் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. அடுத்தடுத்த  காலகட்டங்களில், ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய், இரண்டு ரூபாய் எனக் கூடுதலாக்கப்பட்டது, இதனால் ஆர்வத்துடன் இந்த சீரிய பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், நாள் ஒன்றுக்கு 35 முதல் 40 குரோஸ் வரையில் உற்பத்தித் திறனையும் கூடுதலாக்கினர். தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வாரம் ஒரு முறை கூலி தந்தது. ஏற்கெனவே இப்பகுதியில் செயல்பட்டுவந்த சேவு உற்பத்தி மற்றும் தீப்பெட்டித் தொழிலுக்கு இணையாக நிப்பு தொழிலும் உயர்ந்தது. இதனால் சாத்தூர் பொருளாதார அந்தஸ்தில் வளர்ச்சி அடைந்தது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களும் நேபாளமும் மையூற்றி எழுதும் நிப் பேனாக்களை விரும்புகின்றன. ஏன் என்றால் இவ்விடங்களில் மழை, குளிர் காலங்களில் பால் பாயிண்ட் நிரப்பப்பட்டிருக்கும் மை உறைந்துவிடும் என்பதால், இதற்குப் பதிலாக மை நிரப்பிய நிப் பேனாக்களே பயன்படும்.

நிப் தயாரிப்பு துவங்கிய ஆரம்ப காலங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. 1990 காலகட்டத்தில் பால் பாயின்ட் மற்றும் லெட் பேனாக்களின் வருகையால் மை பேனாக்கள் மற்றும் நிப்புகளின் தேவை குறையத் துவங்கியது. தற்போது மிகக் குறைவான விலையிலேயே மை பேனாவின் தரத்தில் ஜெல் பேனாக்களும் வந்துவிட்டன.

தவிர, குடிசைத் தொழிலில் வரும் இத்தொழிலுக்கு அரசின் சலுகையோ கடனுதவியோ வழங்கப்படுவதில்லை. கூடவே அரசும் நிப் தயாரிப்புக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தையும் நிறுத்திவிட்டதால் தற்போது தொழில் நடத்தவே சிரமமாக உள்ளது. தற்போது மொத்தமே 3 தொழிற்சாலைகள் மட்டுமே 10 தொழிலாளர்களைக் கொண்டு நிப் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

மீண்டும் இத்தொழில் புத்துயிர் பெற வேண்டுமானால் மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு காலத்தில் நன்றாக எழுதிப் பழக மை பேனாவைப் பயன்படுத்தியதைப் போல குழந்தைகளையும், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களிலும் பேனா பயன்படுத்துமாறு அறிவித்தால் தங்கள் தொழில் வளமும் பலமும் பெறும் என்று நினைக்கிறார்கள் இன்னமும் இந்தத் தொழிலில் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT