தற்போதைய செய்திகள்

மனிதநேய சேவைக்காக அன்பாலயத்துக்கு  மேரி கிளப்வாலா ஜாதவ் விருது

DIN

சென்னை சமூகப் பணிக் கல்லூரி நிறுவியுள்ள மனிதநேய சேவைக்கான  மேரி கிளப்வாலா ஜாதவ் விருது, திருச்சி அன்பாலயத்துக்கு வழங்கப்பட்டது.

சென்னை சமூகப் பணிக் கல்லூரியில் நிறுவனர்  மேரி கிளப்வாலா ஜாதவ் நினைவாக, வெள்ளிவிழா ஆண்டு நினைவுச் சொற்பொழிவும் சிறப்பு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது.

விழாவில் நினைவுச் சொற்பொழிவாற்றிய பான்யன் அமைப்பின் நிறுவனரும் மனநல ஆர்வலருமான வந்தனா கோபிகுமார், சமுதாய, சூழல் மற்றும் பண்பாட்டு ரீதியில் மனநலப் பிரச்னைகளை அணுக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், பதின்ம வயதில் குழந்தைகள் மனம்சார்ந்த நெருக்குதல்களுக்கு ஆளாகி, தன்னளவில் மீண்டுவர இயலாமல் தற்கொலை முடிவுகளுக்குச் சென்றுவிடுகின்றனர் என்றும் வந்தனா தெரிவித்தார்.

சமூகப் பணிக் கல்லூரி, வைர விழா ஆண்டான 2012 முதல்  நிறுவனர்  மேரி கிளப்வாலா ஜாதவ் பெயரில் மனிதநேய சேவைக்கான விருதை வழங்கிவருகிறது. இந்த ஆண்டு, மனநலம் பாதிக்கப்பட்டோர் மேம்பாட்டுக்காகச் சிறப்பான சேவை செய்துவரும் திருச்சி அன்பாலயம் தொண்டு நிறுவனத்துக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

ரூ. 1 லட்சம் தொகையுடன் சான்றும் கொண்ட இவ்விருதைக் கல்லூரிச் செயலர் முத்துக்குமார் தாணு வழங்க, அன்பாலயம் அமைப்பின் நிறுவனர் டி.கே.எஸ். செந்தில்குமார் பெற்றுக்கொண்டு, தன்னுடைய பணியில் எதிர்கொண்ட அனுபவங்களை எடுத்துரைத்தார்.

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு மற்றவர்களால் கைவிடப்பட்ட ஆதரவற்றவர்களுக்கான மறுவாழ்வு மையமாக அன்பாலயம் செயல்படுகிறது. மேலும், பக்கவாதம் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, குடும்பங்களால் கைவிடப்பட்ட அல்லது  தவிர்க்கப்பட்டவர்களை வைத்துப் பராமரிக்கும் அமைப்பாகவும் அன்பாலயம் சேவையாற்றுகிறது.

விழாவுக்குக் கல்லூரித் தலைவர் கே.ஏ. மாத்யூ தலைமை வகித்தார். விருதாளரைக் கல்லூரி முதன்மையர் முனைவர் ஆர். சுபாஷினி அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ராஜா சாமுவேல் வரவேற்றார். நிறைவில் முனைவர் ஜே.எஸ். குணவதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT